கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி - கேப்டன் விராட்கோலி பேட்டி + "||" + Ravisastri is happy to continue as coach of the Indian team - Interview with Captain Virat kohli

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி - கேப்டன் விராட்கோலி பேட்டி

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி - கேப்டன் விராட்கோலி பேட்டி
ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
மும்பை,

வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் புறப்பட்டது. முன்னதாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு குறித்து கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் எல்லோருக்கும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் நல்ல புரிந்துணர்வு உள்ளது. ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தொடர்ந்தால் நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம். இந்த விஷயத்தில் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தான் முடிவு செய்யும்.


ரோகித் சர்மாவுக்கும், எனக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. நான் ஒருவரை விரும்பவில்லை என்றால் அதனை என் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும். கடந்த சில நாட்களாக இதுபோன்ற விஷயங்கள் நிறைய நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு வீரர்கள் அறையில் நிலவும் சூழ்நிலை மிகவும் முக்கியமானதாகும். அந்த தகவல் உண்மையாக இருந்து இருந்தால் எங்களால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியாது. இது தொடர்பாக வரும் வதந்திகள் முட்டாள்தனமானது. நான் எப்பொழுதும் ரோகித் சர்மாவை பாராட்டி வந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய பார்வையில் இவை அனைத்தும் குழப்பங்களே. இதனால் யார் பயன் அடைகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற கருத்துகள் வெளிவருவது கேலிக்குரியதாகும். நாம் உண்மைகளை கவனிக்காமல் பொய்யை தொடர்ந்து ஊட்டுகிறோம். நடந்து முடிந்த நல்ல விஷயங்கள் அனைத்திலும் நாம் பார்வையற்றவர்களாக மாறுகிறோம். இல்லாத ஒன்றை நமக்குள் உருவாக்கி அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை நான் நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். இது அவமானத்துக்குரியது. இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்வதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான குறுகிய வடிவிலான போட்டி தொடரில் இருந்து நான் ஒய்வு எடுத்து கொள்ளும்படி யாரும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு விராட்கோலி கூறினார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவிக்கையில், ‘ஓய்வு அறையில் நானும் அங்கம் வகித்து வருகிறேன். அணியில் எந்தவித பிளவும் இல்லை. அணியில் வேறுபாடு இருந்தால் எப்படி இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியும். ஆட்டத்தை விட எந்த தனிநபரும் பெரியவர் இல்லை’ என்றார்.

உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு கேப்டன் விராட்கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்தித்து பேசுவதை தவிர்ப்பதாகவும், அணியில் பிளவு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதனால் இன்று விராட்கோலி பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்பவில்லை என்று செய்திகள் பரவின. ஆனால் விராட்கோலி பத்திரிகையாளர்களை சந்தித்து எல்லா செய்திகளும் வதந்தி என்று மறுத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு வருகிற 13 அல்லது 14-ந் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. மீண்டும் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.