தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றி


தூத்துக்குடி பேட்ரியாட்சை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றி
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 8:38 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது.

நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

8 அணிகள் இடையிலான 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லை மற்றும் திண்டுக்கல் நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் நெல்லையில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தூத்துக்குடி கேப்டன் சுப்பிரமணிய சிவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணியில் விஷால் வைத்யா 2 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பிறகு சித்தார்த்தும், கேப்டன் பாபா அபராஜித்தும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது சித்தார்த் 50 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 14 ரன்னில் வெளியேறினார்.

சதீஷ் மிரட்டல்

4-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் ஆர்.சதீஷ் களம் கண்டார். அவர் வந்த பிறகு தான் ஆட்டம் சூடுபிடித்தது. வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சனின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் பறக்க விட்ட சதீஷ், அவரது இன்னொரு ஓவரையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்டார். இதனால் இறுதி கட்டத்தில் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட எகிறியது.

20 ஓவர் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். கேப்டன் பாபா அபராஜித் 76 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.சதீஷ் 47 ரன்களுடனும் (19 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 77 ரன்களை திரட்டினர்.

தூத்துக்குடி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் கட்டுக்கோப்புடன் பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். அதே சமயம் அதிசயராஜ் டேவிட்சன் 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கினார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சு இதுவாகும்.

தூத்துக்குடி தோல்வி

பின்னர் 194 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தூத்துக்குடி அணி, காஞ்சியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்த தூத்துக்குடி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் காஞ்சி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தூத்துக்குடி அணியில் கேப்டன் சுப்பிரமணிய சிவா (3 ரன்) உள்பட 4 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். அதிகபட்சமாக செந்தில்நாதன் 25 ரன்கள் எடுத்தார். காஞ்சி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கவுதம் தாமரை கண்ணன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

4-வது லீக்கில் ஆடிய காஞ்சி அணிக்கு இது 3-வது வெற்றியாகும். மேலும், டி.என்.பி.எல். தொடரில் தூத்துக்குடியை காஞ்சி அணி சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 3 முறை தோற்று இருந்தது. இந்த சீசனில் பெரும் சறுக்கலை சந்தித்து வரும் தூத்துக்குடி அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Next Story