டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் மதுரை அணி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் மதுரை அணி வெற்றி
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 7:09 PM GMT)

டி.என்பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது.

திண்டுக்கல், 

டி.என்பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது.

விஜய் 78 ரன்

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் நத்தம் மற்றும் நெல்லையில் நடந்து வருகிறது. இதில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. கடந்த இரு ஆட்டங்களில் ஆடாத முரளிவிஜய், திருச்சி அணிக்கு திரும்பினார்.

‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் ஷிஜித் சந்திரன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முரளிவிஜயும், முகுந்தும் திருச்சி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான தொடக்கம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் (13.3 ஓவர்) திரட்டினர். முகுந்த் 32 ரன்னில் (32 பந்து) கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஒரு பக்கம் முரளிவிஜய் நிலைத்து நின்று ஆடினாலும், இன்னொரு பக்கம் வந்த வீரர்கள் தடுமாறியதால் ரன்வேகமும் தளர்ந்தது. 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. முரளிவிஜய் 78 ரன்களுடன் (66 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

சூப்பர் ஓவரில் முடிவு

அடுத்து களம் இறங்கிய மதுரை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நட்சத்திர வீரர் அருண் கார்த்திக் 46 ரன்னில் கேட்ச் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் மதுரை அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. இதில் முதல் 5 பந்தில் 7 ரன் எடுத்த மதுரை அணிக்கு கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை சந்தித்த மிதுன் வீணடித்ததால் திரிலிங்கான இந்த ஆட்டம் டையில் (சமன்) முடிந்தது. அதாவது மதுரை அணியின் ஸ்கோரும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்களில் நின்று போனது. ஜே.கவுசிக் 35 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மதுரை அணி 0.4 ஓவர்களில் 2 சிக்சருடன் 2 விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் எடுத்தது.

பின்னர் சூப்பர் ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திருச்சி அணி ஒரு ஓவரில் 2 விக்கெட்டையும் இழந்து 3 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சூப்பர் ஓவரில் முரளிவிஜய் ரன் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். மதுரை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவிய திருச்சி அணி ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்திருக்கிறது.

Next Story