உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு


உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
x
தினத்தந்தி 31 July 2019 9:30 PM GMT (Updated: 31 July 2019 8:00 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் வழக்கமான ஆட்டம் முடிவிலும், சூப்பர் ஓவர் முடிவிலும் போட்டி ‘டை’ ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பவுண்டரி மூலம் வெற்றியை முடிவு செய்ததற்கும், கடைசி ஓவரில் ‘ஓவர்துரோவில்’ 6 ரன்கள் கொடுக்கப்பட்டதும் சர்ச்சையாக வெடித்தது. கடைசி ஓவரில் 4–வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் பந்தை அடித்து விட்டு 2 ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினார். அப்போது பீல்டர் மார்ட்டின் கப்தில் பந்தை தடுத்து விக்கெட் கீப்பர் டாம் லாதமை நோக்கி எறிந்தார். ஆனால் அந்த பந்து கிரீசை நெருங்கிய பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி எல்லையை கடந்தது. அந்த ஒரு பந்தில் பவுண்டரி மற்றும் ஓடி எடுத்த 2 ரன்னையும் சேர்த்து 6 ரன்கள் என்று நடுவர் தர்மசேனா அறிவித்தார். ‘ஓவர்துரோ’ செய்யும் போது பென் ஸ்டோக்ஸ் முழுமையாக 2–வது ரன்னை ஓடி முடிக்காததால் 5 ரன்கள் மட்டுமே வழங்கி இருக்க வேண்டும். தவறுதலாக நடுவர் 6 ரன்கள் வழங்கியது நியூசிலாந்து அணிக்கு பாதகமாக அமைந்தது. ‘ஓவர்துரோ’ மூலம் கிடைத்த பவுண்டரியை பென்ஸ்டோக்ஸ் தங்களுக்கு வேண்டாம் என்று நடுவரிடம் உடனடியாக தெரிவித்ததாகவும், அதனை நடுவர் ஏற்கவில்லை என்று சக வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து பென்ஸ்டோக்ஸ் அளித்த ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் அந்த சமயத்தில் நடந்த எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த தருணத்தில் என்னை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். என் இதயத்தில் கைவைத்தபடி நடந்த சம்பவத்துக்காக வருந்தினேன். நான் நடுவரிடம் சென்று எதுவும் பேசவில்லை. டாம் லாதத்திடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்தேன். இதேபோல் கேன் வில்லியம்சனை பார்த்தும் மன்னிப்பு கோரினேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story