கிரிக்கெட்

காரைக்குடி காளையை சாய்த்துதூத்துக்குடி அணி 2-வது வெற்றி + "||" + Tilt the karaikudi bull Thoothukudi team wins 2nd

காரைக்குடி காளையை சாய்த்துதூத்துக்குடி அணி 2-வது வெற்றி

காரைக்குடி காளையை சாய்த்துதூத்துக்குடி அணி 2-வது வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளையை அடக்கி தூத்துக்குடி அணி 2-வது வெற்றியை பெற்றது.
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளையை அடக்கி தூத்துக்குடி அணி 2-வது வெற்றியை பெற்றது.

ஒரே ஓவரில் 28 ரன்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு திண்டுக்கல் நத்தத்தில் அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டாப்-3 வீரர்களான கமலேஷ் (2 ரன்), அக்‌ஷய் சீனிவாசன் (9 ரன்), அபிஷேக் (8 ரன்) மூன்று பேரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ராஜகோபால் 34 ரன்கள் எடுத்த திருப்தியோடு வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு கேப்டன் சுப்பிரமணிய சிவாவும், வெங்கடேசும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். குறிப்பாக கேப்டன் சுப்பிரமணிய சிவா அதிரடி காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர் சுனில் சாம் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி நொறுக்கினார். வைடு உள்பட அந்த ஓவரில் மொத்தம் 28 ரன்கள் கிடைத்தது. இதனால் தூத்துக்குடியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட அதிகரித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர்.

20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. சுப்பிரமணிய சிவா 87 ரன்களுடனும் (40 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), வெங்கேடஷ் 30 ரன்களுடனும் (26 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.

தூத்துக்குடி வெற்றி

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் புகுந்த காரைக்குடி அணிக்கு 2-வது ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் கேப்டன் அனிருதா (5 ரன்) கேட்ச் ஆனார். இதன் பிறகு தகிடுதத்தம் போட்ட காரைக்குடி காளையால் கடைசி வரை நிமிர முடியவில்லை. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காரைக்குடி அணியில் அதிகபட்சமாக சூர்யபிரகாஷ் 31 ரன்கள் எடுத்தார்.

தூத்துக்குடி தரப்பில் தமிழ் குமரன், நாதன், வெங்கடேஷ் தலா 2 விக்கெட்டுகளும், அதிசயராஜ், கணேஷ் மூர்த்தி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

5-வது லீக்கில் ஆடிய தூத்துக்குடி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 4-வது தோல்வியை தழுவிய காரைக்குடி அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிவிட்டது.