டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 1 Aug 2019 11:00 PM GMT (Updated: 1 Aug 2019 8:48 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

4–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் நத்தம் மற்றும் நெல்லையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நத்தத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கும் 19–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொள்கிறது.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய அணிகளை வரிசையாக புரட்டியெடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 புள்ளிகளுடன் தற்போது 3–வது இடத்தில் உள்ளது.

பதானி கருத்து

தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் மற்றும் கேப்டன் கவுசிக் காந்தி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரியசாமி, ஹரிஷ்குமார், சுழற்பந்து வீச்சாளர்கள் அலெக்சாண்டர், முருகன் அஸ்வின் முத்திரை பதித்து வருகிறார்கள். இதே கூட்டணியின் ஆதிக்கம் தொடரும் பட்சத்தில் கில்லீசின் வெற்றிப்பயணத்தை தடுக்க முடியாது. இந்த ஆட்டத்திலும் வாகை சூடி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்புடன் கில்லீஸ் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறுகையில், ‘முதல் ஆட்டத்தில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. அடுத்த 3 ஆட்டங்களில் பிரமாதமாக ஆடியிருக்கிறோம். வெற்றி பெற்றதை விட ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஆட்டங்களிலும் கடும் முயற்சி எடுத்து வெற்றிக்கு முயற்சிப்போம். எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கமாட்டோம்’ என்றார்.

காஞ்சி அணி எப்படி?

பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் அணியும் கில்லீஸ் போன்று முதல் ஆட்டத்தில் தோற்று அதன் பிறகு அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றியோடு எழுச்சி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிராக காஞ்சி வீரன்ஸ் அணி 193 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு கேப்டன் அபராஜித் (168 ரன்), சஞ்சய் யாதவ் (140 ரன்), ஆல்–ரவுண்டர் ஆர்.சதீஷ் (107 ரன்) ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். மொத்தத்தில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் காஞ்சி வீரன்ஸ் அணியும் வலுவுடன் இருப்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

டி.என்.பி.எல். வரலாற்றில் காஞ்சி வீரன்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை இதுவரை வீழ்த்தியது கிடையாது. சந்தித்த 3 ஆட்டங்களிலும் வீரன்சுக்கு தோல்வியே மிஞ்சியது.

மற்றொரு ஆட்டம்

முன்னதாக இதே மைதானத்தில் மாலை 3.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ்– மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தலா 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானதாக அமைந்திருப்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story