கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்:ஸ்டீவன் சுமித் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது ஆஸ்திரேலியா + "||" + Australia recovering from the collapse of Steven Summit

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்:ஸ்டீவன் சுமித் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்:ஸ்டீவன் சுமித் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து ஸ்டீவன் சுமித் சதம் அடித்து காப்பாற்றினார்.
பர்மிங்காம், 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து ஸ்டீவன் சுமித் சதம் அடித்து காப்பாற்றினார்.

ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நீண்ட பாரம்பரியமிக்க இந்த ஆஷஸ் யுத்தத்தின் முதலாவது டெஸ்ட் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியின் முடிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் மேத்யூ வேட், பீட்டர் சிடில் வாய்ப்பு பெற்றனர். ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்ட்டும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடுத்த ‘ஸ்விங்’ தாக்குதலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

வார்னருக்கு தவறான தீர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தில் வார்னருக்கு எல்.பி.டபிள்யூ. கேட்டு இங்கிலாந்து வீரர்கள் முறையிட்டனர். நடுவர் விரலை உயர்த்தாததால் இங்கிலாந்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தது. டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வது தெரியவரவே, வார்னர் தப்பினார். இருப்பினும் அதே ஓவரின் 5-வது பந்தில் வார்னர் (2 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. டி.ஆர்.எஸ். வாய்ப்பை வார்னர் பயன்படுத்தி இருந்தால் தொடர்ந்து ஆடும் அதிர்ஷ்டத்தை பெற்றிருப்பார். நடுவரின் தவறான தீர்ப்புக்கு அவர் இரையாகி விட்டார். இதே போல் பான்கிராப்டின் (8 ரன்) விக்கெட்டையும் பிராட் கபளகரம் செய்தார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜாவும் (13 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆஸ்திரேலியா 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.

இதைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், டிராவிஸ் ஹெட்டும் கைகோர்த்து உணவு இடைவேளை வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

சுமித் சதம்

அணியின் ஸ்கோர் 99 ரன்களை எட்டிய போது டிராவிஸ் ஹெட் (35 ரன்) வீழ்ந்தார். சுமித்தும் 34 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. நடுவர் எல்.பி.டபிள்யூ. கொடுத்ததும் உடனடியாக டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தினார். டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை விட்டு நகர்ந்து செல்வது தெரிந்ததால், நடுவரின் தீர்ப்பு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் சுமித் வெளியேறி இருந்தால் ஆஸ்திரேலியாவின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்.

ஒரு பக்கம் ஸ்டீவன் சுமித் போராட மறுமுனையில் மேத்யூ வேட் (1 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (5 ரன்), ஜேம்ஸ் பேட்டின்சன் (0), கம்மின்ஸ் (5 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அப்போது ஆஸ்திரேலியா 122 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஸ்டீவன் சுமித், பீட்டர் சிடிலின் துணையுடன் அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்தார். உறுதிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பவுலர்களுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்கினார். இவர்கள் 9-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். சிடில் 44 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த நாதன் லயனையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவன் சுமித் தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அவரது 9-வது செஞ்சுரியாகும். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்த பிறகு களம் கண்ட முதல் டெஸ்டிலேயே சுமித் பிரமிக்க வைத்து இருக்கிறார். இறுதியில் சுமித் 144 ரன்களில் (219 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர் ) கிளன் போல்டு ஆனார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 80.4 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. நாதன் லயன் 12 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

ஆண்டர்சன் காயம்

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 4-வது ஓவரை வீசிய போது வலது பின்னங்காலில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அத்துடன் வெளியேறி சிகிச்சை பெற்ற ஆண்டர்சன் மீண்டும் களம் திரும்பி பீல்டிங் செய்தார். ஆனால் தசைக்கிழிவு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்டு பந்து வீசவில்லை.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்திருந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...