கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்:சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றிகாஞ்சி வீரன்சை வீழ்த்தியது + "||" + TNPL Cricket: Chepauk Super Gillies Team 4 wins

டி.என்.பி.எல். கிரிக்கெட்:சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றிகாஞ்சி வீரன்சை வீழ்த்தியது

டி.என்.பி.எல். கிரிக்கெட்:சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றிகாஞ்சி வீரன்சை வீழ்த்தியது
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்சை பந்தாடி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்சை பந்தாடி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

கோபிநாத் ஏமாற்றம்

8 அணிகள் இடையிலான 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தம் மற்றும் நெல்லையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நத்தத்தில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காஞ்சி வீரன்சுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கில்லீஸ் அணிக்கு தொடக்கம் மெச்சும்படி இல்லை.

தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் (1 ரன்), வேகப்பந்து வீச்சாளர் தாமரைக்கண்ணன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ 27 ரன்னுடன் (20 பந்து, 5 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் கேப்டன் கவுசிக் காந்தியும், சசிதேவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 12.3 ஓவர்களில் கில்லீஸ் அணி 100 ரன்களை தொட்டது. அணியின் ஸ்கோர் 113 ரன்களாக உயர்ந்தபோது, சசிதேவ் 41 ரன்களில் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

ஹரிஷ்குமார் 18 பந்தில் அரைசதம்

4-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் ஹரிஷ்குமார் நுழைந்தார். அவர் வந்ததும் ஆட்டம் சூடுபிடித்தது. தீபன் லிங்கேசின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் தெறிக்கவிட்டு குஷிப்படுத்திய ஹரிஷ்குமார், தாமரைக் கண்ணனின் ஓவரிலும் 2 சிக்சர் விரட்டினார். கடைசி ஓவரில் மேலும் ஒரு சிக்சர் ஓட விட்ட ஹரிஷ்குமார் 18 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 2-வது அதிவேக அரைசதம் இதுவாகும். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் காந்தி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து, இந்த ஆண்டில் முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் கில்லீஸ் அணியின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். ஹரிஷ்குமார் 53 ரன்களுடனும் (20 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்), கவுசிக் காந்தி 50 ரன்களுடன் (48 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் திரட்டினர்.

காஞ்சி திணறல்

பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய காஞ்சி வீரன்ஸ், கில்லீசின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தீபன் லிங்கேஷ் (1 ரன்), விஷால் வைத்யா (10 ரன்) ஆகிய இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி காலி செய்தார். கேப்டன் பாபா அபராஜித் (11 ரன்), ஹரிஷ்குமாரின் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். 44 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த காஞ்சி அணியால் அதன் பிறகு வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. அந்த அணி 19.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு அடங்கியது.

இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. கில்லீஸ் தரப்பில் ஹரிஷ்குமார் 4 விக்கெட்டுகளும், பெரியசாமி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஹரிஷ்குமார் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி

5-வது ஆட்டத்தில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாகும். அத்துடன் புள்ளி பட்டியலிலும் 8 புள்ளியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று இரவு 7.15 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை சந்திக்கிறது. காஞ்சி வீரன்சுக்கு இது 2-வது தோல்வியாகும்.