வெஸ்ட் இண்டீசை 95 ரன்னில் சுருட்டியது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி


வெஸ்ட் இண்டீசை 95 ரன்னில் சுருட்டியது: முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி
x
தினத்தந்தி 3 Aug 2019 11:30 PM GMT (Updated: 3 Aug 2019 9:01 PM GMT)

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 95 ரன்னில் சுருட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

லாடெர்ஹில், 

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 95 ரன்னில் சுருட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் முதலில் அமெரிக்காவில் இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று நடந்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக அடியெடுத்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 10 மாதங்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்தார். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரன்மழை பொழியப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆடுகளம் அதற்கு நேர்மாறாக காணப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரிலேயே ஜான் கேம்ப்பெல் (0) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான இவின் லீவிசை (0) புவனேஷ்வர்குமார் வெளியேற்றினார்.

இதனால் திகைப்படைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஒரே ஓவரில் ‘இரட்டை செக்’ வைத்து நிலைகுலைய வைத்தார். அவரது பந்து வீச்சில் நிகோலஸ் பூரன் (20 ரன்), ஹெட்மயர் (0) இருவரும் வீழ்ந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் 95 ரன்

மிடில் வரிசையில் கீரன் பொல்லார்ட் போராட, மறுமுனையில் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜாஆகியோரும் சுழலில் மிரட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக பணிந்தது. பொல்லார்ட் 49 ரன்களில் (49 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் நவ்தீப் சைனி பொல்லார்ட்டின் விக்கெட்டை வீழ்த்தியதோடு கடைசி ஓவரை மெய்டனாக்கியது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 95 ரன்களுக்கு முடக்கப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் பூரன், பொல்லார்ட் தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்தியா வெற்றி

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியால் சிறிய இலக்கை கூட சுலபமாக நெருங்க முடியவில்லை. தட்டுத்தடுமாறித்தான் வெற்றி பெற முடிந்தது. இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியில் வாஷிங்டன் சுந்தர் (8 ரன்) பந்தை சிக்சருக்கு விரட்டி இலக்கை அடைய வைத்தார். அதிகபட்சமாக துணை கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி, மனிஷ் பாண்டே தலா 19 ரன்களும் எடுத்தனர்.

இன்று 2-வது ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டியும் இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென் 1, சோனி டென் 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story