கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட் + "||" + Ashes Test against Australia: England all out for 374

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது.

பர்மிங்காம்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது.

ஆ‌ஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித்தின் (144 ரன்) சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2–வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 125 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று ரோரி பர்ன்சும், பென் ஸ்டோக்சும் தொடர்ந்து விளையாடினர். சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். ரோரி பர்ன்ஸ் (133 ரன், 312 பந்து, 17 பவுண்டரி) நாதன் லயனின் சுழலில் சிக்கினார். 22 ரன்னில் எல்.பி.டபிள்யூ. வாய்ப்பு மற்றும் 75 ரன்னில் ரன்–அவுட் ஆகிய கண்டத்தில் இருந்து தப்பித்த பர்ன்ஸ் சதம் அடித்து தங்கள் அணியை தூக்கி நிறுத்தி இருக்கிறார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (8 ரன்), மொயீன் அலி (0) நிலைக்கவில்லை.

இங்கிலாந்து முன்னிலை

இதன் பின்னர் 9–வது விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்சும், ஸ்டூவர்ட் பிராட்டும் கைகோர்த்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்ததுடன் அணியையும் 350 ரன்களை கடக்க வைத்தனர். இவர்கள் 9–வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். ஸ்டூவர்ட் பிராட் 29 ரன்னிலும் (67 பந்து, 2 பவுண்டரி), அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135.5 ஓவர்களில் 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆகி, 90 ரன்கள் முன்னிலை பெற்றது. கிறிஸ் வோக்ஸ் 37 ரன்களுடன் (95 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன், பீட்டர் சிடில் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் முன்னிலை வழங்கிய எந்த வெளிநாட்டு அணியும் வென்றது கிடையாது. அந்த சரித்திரத்தை மாற்றும் நோக்குடன் 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சை ஆடியது.