திருச்சி வாரியர்சை வீழ்த்தி திண்டுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ஜெகதீசன் சதம் விளாசினார்


திருச்சி வாரியர்சை வீழ்த்தி திண்டுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் ஜெகதீசன் சதம் விளாசினார்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:15 PM GMT (Updated: 3 Aug 2019 9:25 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி 5–வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி 5–வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

விஜய் 99 ரன்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மாலை திண்டுக்கல் நத்தத்தில் நடந்த 20–வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் ஆர்.அஸ்வின், திருச்சியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த திருச்சி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜயும், கே.முகுந்தும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் (13 ஓவர்) எடுத்து வலுவான தொடக்கம் தந்தனர். கே.முகுந்த் 43 ரன்னில் கேட்ச் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முரளிவிஜய் துரதிர்ஷ்டவசமாக 99 ரன்களில் (62 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆனார். அவர் வலுவாக அடித்த ஷாட்டை சதுர்வேத் தாவி குதித்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார். 20 ஓவர்களில் திருச்சி அணி 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது.

ஜெகதீசன் சதம்

தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் நிலைத்து நின்று ஆடி மிரட்டினார். கடைசி 5 ஓவர்களில் திண்டுக்கலின் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் பொய்யாமொழி வீசிய 16–வது ஓவரில் 27 ரன்களும், விஜய் வீசிய 17–வது ஓவரில் 23 ரன்களும் ஜெகதீசனும், விவேக்கும் இணைந்து திரட்டினர். இவ்விரு ஓவர்களிலும் ஜெகதீசன் 4 சிக்சர் பறக்க விட்டதும் அடங்கும். இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும்.

விவேக் 29 ரன்களில் (3 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். அபாரமாக ஆடிய ஜெகதீசன் சதம் விளாசினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 2–வது சதம் இதுவாகும்.

திண்டுக்கல் வெற்றி

இறுதியில் ஜெகதீசன் பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே–ஆப்) நுழைந்தது. அதே சமயம் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட திருச்சி வாரியர்ஸ் அணி வெளியேற்றப்பட்டது.

ஆட்டநாயகன் விருது பெற்ற திண்டுக்கல் வீரர் ஜெகதீசன் இந்த தொடரில் இதுவரை ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 340 ரன்கள் குவித்து முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story