பந்து வீசும் முன்பே நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை சாய்த்து விட்டார் முன்னாள் வீரர்களை விமர்சித்து கம்பீர் கருத்து


பந்து வீசும் முன்பே நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை சாய்த்து விட்டார் முன்னாள் வீரர்களை விமர்சித்து கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 4 Aug 2019 11:00 PM GMT (Updated: 4 Aug 2019 8:21 PM GMT)

இந்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி பந்து வீசும் முன்பே 2 விக்கெட்டுகளை சாய்த்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி பந்து வீசும் முன்பே 2 விக்கெட்டுகளை சாய்த்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

அசத்தல் அறிமுகம் சைனி

புளோரிடாவில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீசை இந்திய பவுலர்கள் வெறும் 95 ரன்னில் சுருட்டினர். இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அமர்க்களப்படுத்தினார். இதில் ஆட்டத்தின் 20–வது ஓவரை அவர் மெய்டனாக வீசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் இவர் தான்.

அரியானா மாநிலத்தில் பிறந்தவரான நவ்தீப் சைனி முதல்தர கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். ஆட்டநாயகன் விருது பெற்ற 26 வயதான நவ்தீப் சைனி, ‘சனிக்கிழமை காலையில் இந்திய அணிக்குரிய தொப்பியை பெற்ற போது, என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாளுக்காகத் தான் நான் காத்திருந்தேன். இந்திய அணிக்காக அறிமுகம் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

நவ்தீப் சைனி இடது கையில் ஓநாய் படத்தை பச்சை (டாட்டூ) குத்தியுள்ளார். அது குறித்து பேசிய சைனி, ‘எனது அண்ணன் சிறுவயது முதலே ஓநாய்கள் படம் அதிகம் பார்ப்பார். அதன் பேரில் வந்த ஈர்ப்பால் கையில் ஓநாய் டாட்டூவை வரைந்தேன். தேமலும் ஓநாய் எந்த சர்க்கசிலும் சாகசம் செய்யாது. அது தனித்துவம் கொண்டவை’ என்றார்.

கம்பீரின் தடாலடி டுவிட்டர்

இதற்கிடையே மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறமைசாலியான நவ்தீப் சைனியை 2013–ம் ஆண்டு டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் முயற்சித்த போது, அப்போது டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்த முன்னாள் வீரர்களான பி‌ஷன்சிங் பெடியும், சேட்டன் சவுகானும் எதிர்த்தனர். அவர்களுடன் கம்பீர் கடும் வாக்குவாதம் செய்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகே அவருக்கு ரஞ்சி வாய்ப்பு கனிந்தது.

இந்த வி‌ஷயத்தை இப்போது கிளறியுள்ள கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ள நவ்தீப் சைனிக்கு வாழ்த்துகள். இந்திய அணியில் பந்து வீசுவதற்கு முன்பே அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்து விட்டார். அந்த விக்கெட்டுகள் பி‌ஷன்சிங் பெடி, சேட்டன் சவுகான். அவரது கிரிக்கெட் திறமையை குறைவாக மதிப்பிட்டு முடக்க நினைத்த அவர்களது மிடில் ஸ்டம்பு, சைனியின் அறிமுகத்தின் மூலம் காணாமல் போய் விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெடி மறுப்பு

கம்பீரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பி‌ஷன்சிங் பெடி, ‘நவ்தீப் சைனி குறித்து ஒரு போதும் எதிர்மறையான கருத்துகள் சொன்னதில்லை. அவர் களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டால் எல்லா சிறப்பும் அவருக்கு மட்டும் உண்டு. சைனி இப்போது தான் இந்திய அணிக்காக ஆடுகிறார். அவரது திறமையை மதிப்பிட இன்னும் கொஞ்சம் காலம் பொறுமை காக்க வேண்டும்’ எனறார்.


Next Story