கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி + "||" + England vs Australia 1st Test Day 5 LIVE Score, Ashes 2019: Nathan Lyon Claims Six, England Stare At Defeat

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பர்மிங்காம்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன.


90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாளில் 2-வது இன்னிங்சில் 112 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பேட்டின்சன் 47 ரன்களுடனும், கம்மின்ஸ் 26 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 142 ரன்னும், மேத்யூ வேட் 110 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து இருந்தது. ரோரி பர்ன்ஸ் 7 ரன்னுடனும், ஜாசன் ராய் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியினரின் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 11 ரன்னிலும், ஜாசன் ராய் 28 ரன்னிலும், ஜோ டென்லி 11 ரன்னிலும், கேப்டன் ஜோரூட் 28 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் ஜோஸ் பட்லர் (1 ரன்), பேர்ஸ்டோ (6 ரன்), பென் ஸ்டோக்ஸ் (6 ரன்), மொயீன் அலி (4 ரன்), ஸ்டூவர்ட் பிராட் ரன் (0) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 67 நிமிடம் போராடிய கிறிஸ்வோக்ஸ் 54 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 52.3 ஓவர்களில் 146 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (144 ரன்கள், 142 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் குறைவாக ரன் எடுத்து விட்டு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது 1981-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் முன்னிலை வழங்கி விட்டு ஒரு வெளிநாட்டு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு மூன்று வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சமீபத்தில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இருப்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களை தொடர்ந்து கிண்டல் செய்ததற்கு அந்த அணி சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.