வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘எனது பந்து வீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது’ - குருணல் பாண்ட்யா


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘எனது பந்து வீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது’ - குருணல் பாண்ட்யா
x
தினத்தந்தி 6 Aug 2019 12:16 AM GMT (Updated: 6 Aug 2019 12:16 AM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில், தனது பந்து வீச்சு மகிழ்ச்சி அளிப்பதாக குருணல் பாண்ட்யா கூறினார்.

லாடெர்ஹில்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்கள் சேர்த்தார். குருணல் பாண்ட்யா 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றிக்கு 15.3 ஓவர்களில் 121 ரன்கள் தேவையாக இருந்தது. இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணி வீரர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். முதலில் பேட்டிங்குக்கு ஆடுகளம் சாதகமாக இருந்தது. அதனை பயன்படுத்தி நமது அணியினர் நல்ல அடித்தளம் அமைத்தனர். 165 ரன்கள் குவித்தது நல்ல ஸ்கோராகும். எங்களது இன்னிங்சில் பின்பாதியில் ஆடுகளத்தின் தன்மை மாறியது. முதல் 2 ஆட்டங்களில் வென்று இருப்பதால் அடுத்த ஆட்டத்தில் சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியும். வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு அருமையாக இருந்தது’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற குருணல் பாண்ட்யா அளித்த பேட்டியில், ‘நான் பந்து வீசிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று அனுகூலமாக இருந்தது. அமெரிக்காவில் ஆடியது நல்ல அனுபவமாகும். இந்த போட்டியின் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் விக்கெட் வீழ்த்துவது எங்களது பணியை எளிதாக்கும். அணியில் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பை அளித்தனர். ஒட்டுமொத்தத்தில் அணி சிறப்பாக செயல்பட்டது’ என்று தெரிவித்தார்.


Next Story