கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடியை வீழ்த்தி திருச்சி அணி முதல் வெற்றி + "||" + TNPL Cricket Trichy Warriors win by 17 runs

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடியை வீழ்த்தி திருச்சி அணி முதல் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடியை வீழ்த்தி திருச்சி அணி முதல் வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி திருச்சி அணி முதல் வெற்றியை பெற்றது. முரளிவிஜய் சதம் அடித்தார்.
திண்டுக்கல்,

8 அணிகள் இடையிலான 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், கே.முகுந்தும் களம் புகுந்தனர். விஜய் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவதில் கவனம் செலுத்தினார். முகுந்த் (6 ரன்), வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஆதித்யா பாரோவும் (0) அவரது ஓவரிலேயே வீழ்ந்தார்.


இதன் பின்னர் விஜயும், ஆதித்யா கணேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதோடு ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினர். வெங்கேடஷ், சரவணனின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட விஜய் 95 ரன்னை அடைந்ததும் நிதானத்தை காட்டினார். முந்தைய ஆட்டத்தில் 99 ரன்னில் ஆட்டம் இழந்ததால் இந்த முறை ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுத்து தனது சதத்தை நிறைவு செய்தார். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இதுவாகும். ஏற்கனவே மதுரை வீரர் அருண் கார்த்திக், திண்டுக்கல் வீரர் ஜெகதீசன் ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.

திருச்சி அணிக்கு வலுவூட்டிய விஜய்-ஆதித்யா கணேஷ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் திரட்டிய நிலையில் கடைசி ஓவரில் பிரிந்தது. விஜய் 101 ரன்களிலும் (57 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்), ஆதித்யா கணேஷ் 56 ரன்களிலும் (45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

20 ஓவர் முடிவில் திருச்சி அணி 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. தூத்துக்குடி தரப்பில் கட்டுக்கோப்புடன் பந்து வீசிய அதிசயராஜ் டேவிட்சன் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய தூத்துக்குடி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அக்‌ஷய் சீனிவாசன் 63 ரன்கள் (47 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) சேர்த்தார். இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோற்று இருந்த திருச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். அதே சமயம் 4-வது தோல்வியை தழுவிய தூத்துக்குடி அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.