கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வாகிறார்? + "||" + Ravisastri re-elected as coach of Indian cricket team?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வாகிறார்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வாகிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பயிற்சியாளர்களின் பதவி காலம் இங்கிலாந்தில் கடந்த மாதம் நிறைவு பெற்ற உலக கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வந்தது. செப்டம்பர் 3-ந் தேதி முடிவடையும் வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடருக்காக ரவிசாஸ்திரி மற்றும் பயிற்சியாளர்களின் பதவி காலம் தற்காலிகமாக 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் மத்தியில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது. கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த கமிட்டியில் முன்னாள் வீரர் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி (ஆஸ்திரேலியா), இந்திய முன்னாள் வீரர்கள் ராஜ்புத், ராபின்சிங், வெங்கடேஷ் பிரசாத் உள்பட பலர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் செய்வதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டினரை கொண்டு வருவதில் நாங்கள் ஆர்வம் காட்டமாட்டோம். கேரி கிர்ஸ்டன் போன்ற சிறப்பு வாய்ந்த வெளிநாட்டினர் விண்ணப்பித்து இருந்தால் அது குறித்து சிந்திக்க வேண்டியது இருந்து இருக்கும். இந்தியாவை சேர்ந்த ஒருவரை பயிற்சியாளராக தேர்வு செய்வதில் தான் எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்படும். ரவிசாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்திய அணி நன்றாக செயல்பட்டு வருகிறது. எனவே பயிற்சியாளர் மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமில்லை என்று நினைக்கிறேன். ரவிசாஸ்திரி மீண்டும் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

ரவிசாஸ்திரிக்கும், கேப்டன் விராட்கோலிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. அணியும் நன்றாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் மாற்றம் கொண்டு வருவது நியாயமாக இருக்காது. இந்த தருணத்தில் பயிற்சியாளரை மாற்றம் செய்வது அணியின் சிறப்பான செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தற்போது மாற்றம் கொண்டு வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டம் மற்றும் வியூகத்தில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். இந்த நிலையில் அதுபோன்று செய்வது சரியான முடிவாக இருக்காது.

பயிற்சியாளர் யார் என்பதை முடிவு செய்வதில் எங்களுக்குள் வேறுபாடு ஏற்பட்டால் கமிட்டியின் சேர்மன் கபில்தேவ் யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ? அவர் இறுதி செய்யப்படுவார். அதுபோன்ற ஒரு சூழ்நிலை வர வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.