ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேற்றம்: கோலி முதலிடத்தில் நீடிப்பு


ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேற்றம்: கோலி முதலிடத்தில் நீடிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 12:32 AM GMT (Updated: 7 Aug 2019 12:32 AM GMT)

ஆஷஸ் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித், பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

துபாய்,

பர்மிங்காமில் நடந்த ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பதம் பார்த்தது. இந்த டெஸ்டில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்டில் சுமித் இரண்டு இன்னிங்சிலும் சதம் (144 மற்றும் 142 ரன்) விளாசி பிரமிக்க வைத்தார். அதுவும் முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் தத்தளித்த போது சுமித்தின் பொறுப்பான ஆட்டம் தான் அந்த அணியை நிமிர வைத்தது. சதங்களின் மூலம் 46 புள்ளிகளை அவர் கூடுதலாக பெற்றார். தற்போது அவரது புள்ளி எண்ணிக்கை 903 ஆக உயர்ந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவன் சுமித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அப்போது அவர் 938 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனாக வலம் வந்தார். தடை காலத்தில் எந்த டெஸ்டிலும் ஆடாததால் புள்ளி எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் 15 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைத்த அவர் மீண்டும் வீறுநடை போட ஆரம்பித்து இருக்கிறார்.

கோலி முதலிடம்

இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். சுமித் பெற்ற ஏற்றத்தால் 3-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் புஜாரா 4-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஷஸ் முதலாவது டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த அவர் 20 புள்ளிகளை சேகரித்து மொத்தம் 898 புள்ளிகளை எட்டியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் மெக்ராத், ஷேன் வாட்சன் ஆகியோருக்கு அடுத்து அதிக தரவரிசை புள்ளிகளை குவித்த ஆஸ்திரேலிய பவுலர் இவர் தான்.

ஆஷஸ் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 இடம் உயர்ந்து 13-வது இடத்தை பிடித்துள்ளார். காயத்தால் முதலாவது டெஸ்டில் 4 ஓவர் மட்டுமே பந்து வீசிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றம் இல்லை. முதல் 3 இடங்களில் முறையே ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ஆகியோர் உள்ளனர்.


Next Story