ஆஷஸ் தொடர் : 2வது போட்டியில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்


ஆஷஸ் தொடர் :  2வது போட்டியில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்
x
தினத்தந்தி 7 Aug 2019 6:52 AM GMT (Updated: 7 Aug 2019 6:52 AM GMT)

ஆஷஸ் தொடரின் 2வது போட்டியில் இருந்து தசை பிடிப்பு காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார்.

பர்மிங்ஹாம்: 

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது 37 வயதான  ஆண்டர்சன் 4 ஓவர்களையே வீசிய நிலையில் வலது காலின் பின் பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக மேற்கொண்டு பந்து வீச முடியாமல் வெளியேறினார். 

இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் ஆண்டர்சனுக்கு தசை பிடிப்பு என்பது உறுதியானது. அவரது உடல் நிலையை இங்கிலாந்து மற்றும் லான்ஷயர் கிளப் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆண்டர்சன் முழு உடல்தகுதி பெறாததால் வரும் 14-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆண்டர்சன் விலகியுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

இவருக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

Next Story