கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் சவுரவ் கங்குலி ஆதங்கம்


கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்  சவுரவ் கங்குலி  ஆதங்கம்
x
தினத்தந்தி 7 Aug 2019 8:02 AM GMT (Updated: 7 Aug 2019 8:02 AM GMT)

ராகுல் டிராவிட் விவகாரத்தில் கடவுள் தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.

பிசிசிஐ-யின் நன்நெறி அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே ஜெயின் லாபம் தரும் இரண்டு பதவிகளை வகிப்பது தொடர்பாக டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய டி.கே ஜெயின், `கடந்த வாரம் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக அவர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அவரது பதிலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்நிலையில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் கங்குலி கடுமையாக சாடியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கங்குலி, `

`இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபேஷன்... இந்த `ஆதாய முரண்’... செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. இந்திய கிரிக்கெட்டுக்கு கடவுள்தான் உதவ வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார். 

முன்னதாக கங்குலியும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பதவி மற்றும் ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு ஆலோசகர் என இரு ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

கங்குலியின் கருத்தை ஹர்பஜன் சிங்கும் வரவேற்றுள்ளார். கங்குலியின் ட்வீட்டை குறிப்பிட்டு, ``இது உண்மையா....? நாம் எங்கே செல்கிறோம் என்றே தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இவரை (டிராவிட்டை) விட சிறந்த நபர் கிடைக்க மாட்டார். இதுபோன்ற லெஜண்டுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்பது அவர்களை அவமதிக்கும் செயல். கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு அவர்களின் சேவை தேவை.. ஆம், இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் வரும் 16-ம் தேதி பிசிசிஐ-க்கு தனது விளக்கத்தை தெரிவிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமா என்பது டிராவிட்டின் விளக்கத்துக்குப் பின்னரே முடிவு செய்யப்படும்.


Next Story