டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி முதல் தோல்வி - கோவையிடம் பணிந்தது


டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி முதல் தோல்வி - கோவையிடம் பணிந்தது
x
தினத்தந்தி 7 Aug 2019 6:08 PM GMT (Updated: 7 Aug 2019 11:33 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீறுநடை போட்டு வந்த திண்டுக்கல் அணி, கோவை கிங்சிடம் பணிந்தது.

நெல்லை,

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நேற்றிரவு அரங்கேறிய 25-லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் மல்லுகட்டியது. திண்டுக்கல் அணியில் கேப்டன் ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்த கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷாருக்கானும், கேப்டன் அபினவ் முகுந்தும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் (6.3 ஓவர்) திரட்டி நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்வேகம் சற்று தளர்ந்தது. திண்டுக்கல் பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்தனர்.

கோவை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஷாருக்கான் 30 ரன்னிலும் (27 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), அபினவ் முகுந்த் 21 ரன்னிலும், வெங்கட்ராமன் 18 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ரஞ்சன் பால் 43 ரன்களிலும் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் 150 ரன்களை எளிதில் தாண்டுவது போல் சென்ற கோவை அணியின் ரன்வேகம் இறுதிகட்டத்தில் மந்தமானது. ஒரே ஓவரில் அந்தோணி தாஸ் (1 ரன்), அகில் ஸ்ரீநாத் (0) கேட்ச் ஆனது பின்னடைவை ஏற்படுத்தியது. கடைசி 4 ஓவர்களில் அந்த அணி வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது.

20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 135 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஹரிநிஷாந்த் (0), கேப்டன் ஜெகதீசன் (0) இருவரும் அஜித்ராமின் சுழலில் சிக்கினர். இதன் பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் தள்ளாடிய திண்டுக்கல் அணியால் வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெற முடியவில்லை. அந்த அணி 18.5 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் கோவை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணிகண்டன் 3 விக்கெட்டுகளும், அஜித்ராம், டி.நடராஜன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தனது கடைசி லீக்கில் விளையாடிய கோவை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் கோவை அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மற்ற ஆட்டங்களின் முடிவை பொறுத்து அந்த அணியின் வாய்ப்பு தெரிய வரும். அதே சமயம் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த திண்டுக்கல் அணிக்கு விழுந்த முதல் அடி இதுவாகும்.



Next Story