கிரிக்கெட்

‘ரிஷாப் பண்டுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது’ - கேப்டன் விராட்கோலி பேட்டி + "||" + Dont Give Crisis to Rishabh pant - Interview with Captain Viratkohli

‘ரிஷாப் பண்டுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது’ - கேப்டன் விராட்கோலி பேட்டி

‘ரிஷாப் பண்டுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது’ - கேப்டன் விராட்கோலி பேட்டி
‘இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு நெருக்கடி அளிக்கக்கூடாது’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
கயானா,

கயானாவில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை இந்திய அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் விராட் கோலி (59 ரன்), ரிஷாப் பண்ட் (4 பவுண்டரி, 4 சிக்சருடன் 65 ரன்) அரைசதம் விளாசினர்.


வெஸ்ட் இண்டீசின் டாப்-3 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருதும், ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். அத்துடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி சந்தித்த 58-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனைக்கு வெஸ்ட்இண்டீஸ் சொந்தமானது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் சில புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்பினோம். அதன்படி சாஹர் சகோதரர்கள் இந்த ஆட்டத்தில் இடம் பிடித்தனர். தீபக் சாஹரின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. அவர் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்ததுடன் ஸ்விங் செய்த விதமும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பதாக அமைந்தது. அதுவும் புதிய பந்தில் எந்தவிதமான சூழ்நிலையிலும் இரு முனையிலும் ஸ்விங் செய்யக்கூடிய அவரது திறமை அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சுக்கு நிகராக இருந்தது.

ரிஷாப் பண்ட் முதல் 2 ஆட்டங்களில் சரியாக ரன் எடுக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். இந்த ஆட்டத்தில் நன்றாக ஆடினார். அதிரடியும் காட்டினார். இந்த ஆட்டத்தை பொறுத்தமட்டில் அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். வருங்காலத்தில் அவர் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த அளவுக்கு அவரிடம் நிறைய திறமை கொட்டிக்கிடக்கிறது. இந்த ஆட்டத்தை அவர் வெற்றிகரமாக முடித்த விதம் அவரது நம்பிக்கையை அதிகப்படுத்தும். தொடர்ந்து இதுபோன்ற ஆட்டத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள அவருக்கு போதிய வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். அவருக்கு தேவையில்லாமல் நெருக்கடி அளிக்கக்கூடாது.

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அது குறித்து இப்போது சிந்திக்க வேண்டியதில்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு உலக கோப்பை போட்டிக்கான திட்டமிடுதலை தொடங்குவது தான் சரியானதாக இருக்கும்.

தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவிக்க வேண்டும். உலக அரங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக திகழ வேண்டும் என்பது தான் எப்பொழுதும் எங்களது குறிக்கோளாகும். கடந்த 3-4 ஆண்டுகளாக அதனை நாங்கள் செய்து வருவதாக நினைக்கிறேன். இவ்வாறு கோலி கூறினார்.