கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது + "||" + The first one-day cricket match between India and West Indies - taking place today

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - இன்று நடக்கிறது
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது.
கயானா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.


இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அதே போன்று ஒரு நாள் போட்டியிலும் கோலோச்சுவதற்கு முனைப்பு காட்டும்.

விரல் காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 20 ஓவர் தொடரில் (1, 23, 3 ரன்) சோபிக்கவில்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த அவரது பார்ம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார். 4-வது வரிசையில் யார் ஆடுவார் என்று கேள்வி எழுந்தாலும், லோகேஷ் ராகுல் அந்த வரிசையில் களம் காணவே அதிக வாய்ப்புள்ளது. கடைசி 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவின் அதிரடி இந்த ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருப்பதால் முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோருடன் நவ்தீப் சைனி ஒரு நாள் போட்டியிலும் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாசன் ஹோல்டர் தலைமையில் களம் இறங்குகிறது. கனடாவில் கிரிக்கெட் போட்டியில் ஆடியதால் 20 ஓவர் தொடரில் ஆடுவதை தவிர்த்த அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் ஆடுகிறார். இந்த தொடருடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இருப்பதால் கிறிஸ் கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில் விளையாடுவார். அவர் இன்னும் 13 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை பிரையன் லாராவிடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார். உள்ளூரில் ஆடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். திறமையான வீரர்களின் பட்டாளத்தை கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கடும் சவால் அளிக்க தீவிரமாக உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 127 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 60-ல் இந்தியாவும், 62-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டத்தில் முடிவு இல்லை. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி கடைசியாக ஆடிய 4 ஒரு நாள் தொடர்களை (இதில் முத்தரப்பு தொடர் ஒன்றும் அடங்கும்) வென்று இருக்கிறது. அந்த வெற்றிப்பயணத்தை இந்த முறையும் நீட்டிக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ் அல்லது ஜான் கேம்ப்பெல், கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், காட்ரெல், ஒஷானே தாமஸ், கெமார் ரோச், கீமோ பால்.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஆட்டம் லேசான மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.