கிரிக்கெட்

காரைக்குடி காளையை போராடி வீழ்த்தி மதுரை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + The Madurai team Progress to the next round

காரைக்குடி காளையை போராடி வீழ்த்தி மதுரை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

காரைக்குடி காளையை போராடி வீழ்த்தி மதுரை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை பாந்தர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, காரைக்குடி காளையை சந்தித்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த காரைக்குடி பேட்ஸ்மேன்கள், மதுரை பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். அதிரடி காட்ட முடியாமல் தவித்த காரைக்குடி அணி 20 ஓவர்களை முழுமையாக ஆடி 93 ரன்னில் சுருண்டது. டி.என்.பி.எல். வரலாற்றில் காரைக்குடி அணியின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் அதிகபட்சமாக ஆதித்யா, கணேஷ் தலா 14 ரன்கள் எடுத்தனர். மதுரை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிரன் ஆகாஷ், சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


அடுத்து மதுரை அணி இலக்கை வேகமாக அடைய வேண்டும் என்ற நோக்குடன் ஆடிய போது விக்கெட்டுகளை மளளெவென இழந்து தடுமாறியது. அருண் கார்த்திக் (0), நிலேஷ் சுப்பிரமணியன் (0) முதல் ஓவரிலேயே காலியானார்கள். 40 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சரிவை தடுத்து நிறுத்த கேப்டன் ஷிஜித் சந்திரனும், செல்வகுமரனும் போராடினர். ஷிஜித் சந்திரன் 25 ரன்னிலும், செல்வகுமரன் 21 ரன்னிலும் வீழந்ததும் மறுபடியும் மதுரை அணி ஊசலாடியது. ஒரு கட்டத்தில் 73 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை (14.2 ஓவர்) தாரைவார்த்து தத்தளித்த மதுரை அணியை பின்வரிசை வீரர் கிரன் ஆகாஷ் காப்பாற்றினார். அவர் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த பிறகே மதுரை அணியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மதுரை அணி 18.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கிரன் ஆகாஷ் 18 ரன்னுடனும், மிதுன் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

5-வது வெற்றியை சுவைத்த மதுரை அணி அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது.

6-வது தோல்வியை தழுவிய காரைக்குடி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.