கிரிக்கெட்

உலக கோப்பை போட்டி வரிவிலக்கு விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும் வருவாயை குறைக்க ஐ.சி.சி. முடிவு + "||" + Present to the Indian Cricket Board To reduce revenues ICC Decision

உலக கோப்பை போட்டி வரிவிலக்கு விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும் வருவாயை குறைக்க ஐ.சி.சி. முடிவு

உலக கோப்பை போட்டி வரிவிலக்கு விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும் வருவாயை குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வரி விலக்கு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள ஐ.சி.சி, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும் வருவாயை குறைக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் எந்த நாட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறதோ? அந்த தேசத்திடம் இருந்து முழுமையான வரிவிலக்கு கோருவது வழக்கம். 2016-ம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது ஐ.சி.சி.க்கு வரி விலக்கு கிடைக்கவில்லை. இந்த போட்டியின் மூலம் கிடைத்த வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


அதாவது 2016-ம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஐ.சி.சி. ஊடக ஒப்பந்தத்தின்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐ.சி.சி.க்கு செலுத்த வேண்டிய தொகையில் 10 சதவீதத்தை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இது குறித்து சமீபத்தில் விவாதித்த ஐ.சி.சி, 2016-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) இருந்து தொகையை வேறு விதமாக வசூலிக்கும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

ரூ.286 கோடி குறைக்கப்படுமா?

ஆண்டு வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. 2016-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.2,860 கோடி வழங்க வேண்டும். அந்த மொத்த தொகையில் 10 சதவீதத்தை பிடித்த செய்ய அதாவது ரூ.286 கோடியை குறைக்க ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

உலக கோப்பை உரிமத்திற்கான பி.சி.சிஐ.-ஐ.சி.சி. இடையிலான ஒப்பந்தம் இங்கிலாந்து சட்டப்படி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் இங்கிலாந்து சட்ட நிறுவனத்தின் ஆலோசனையை நாட பி.சி.சி.ஐ உத்தேசித்துள்ளது.

ஐ.சி.சி. - இந்திய கிரிக்கெட் வாரியம் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த வரிப்பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அரசாங்கத்தின் வருமானவரி சட்ட விதிமுறைகளை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று பல முறை ஐ.சி.சி.யிடம் சொல்லிவிட்டோம். அதே சமயம் வரி விதிப்பு முறையை தளர்த்தாவிட்டால் 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை ஆகிய மெகா தொடர்களை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்படும்’ என்றார்.

மேலும் அந்த நிர்வாகி கூறுகையில், ‘பொதுவாக ஐ.சி.சி, உலக கோப்பை போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு கலால் வரி விதிக்கக்கூடாது என்று கேட்பது உண்டு. ஆனால் இந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தான் ஏற்கனவே இந்தியாவில் நடக்கும் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்று இருக்கிறது. அதற்குரிய உபகரணங்கள் இங்கேயே உள்ளன. அப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் அவர்களின் வரிச்சுமையை ஏற்க வேண்டும். எது எப்படியோ அரசாங்கத்தின் விதிமுறையை நாங்கள் மீற முடியாது. ஐ.சி.சி.யின் சேர்மனாக இருக்கும் ஷசாங் மனோகர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர். அவர் இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.