கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல் + "||" + TNPL. Cricket: Chepauk Super Gillies - Tuticorin Patriots clash today

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
நெல்லை, 

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் இரண்டு ஆட்டங்களுடன் லீக் சுற்று நிறைவடைகிறது.

நெல்லையில் மாலை 3.15 மணிக்கு நடக்கும் 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சுப்பிரமணியசிவா தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்சுடன் மோதுகிறது.

4 வெற்றி, 2 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அடுத்த சுற்றை (பிளே-ஆப்) எட்டுவதுடன் டாப்-2 இடத்தையும் உறுதி செய்து விடலாம். தோற்றாலும் ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் கில்லீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்புக்கு ஆபத்து இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கோபிநாத் (224 ரன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ (144 ரன்) மற்றும் ஆல்-ரவுண்டர் ஹரிஷ்குமார் (141 ரன் மற்றும் 11 விக்கெட்) உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கேப்டன் கவுசிக் காந்தியின் பேட்டிங் தான் சீராக இல்லை. அவரும் பார்முக்கு திரும்பினால், கில்லீஸ் அணியின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

பந்து வீச்சில் பெரியசாமி (11 விக்கெட்), அலெக்சாண்டர் (10 விக்கெட்), முருகன் அஸ்வின் (7 விக்கெட்) உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள். நெல்லை ஸ்டேடியத்தில் ஆடிய மூன்று லீக்கிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. எனவே கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளி மட்டுமே எடுத்துள்ள முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகிப் போனது. வாஷிங்டன் சுந்தர் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் ஆடியதால் டிஎன்.பி.எல். கிரிக்கெட்டுக்கு வர முடியவில்லை.

அந்த அணியில் கேப்டன் சுப்பிரமணியசிவா (188 ரன்), அக்‌ஷய் சீனிவாசன் (196 ரன்) ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சில் அதிசயராஜ் டேவிட்சன் (7 விக்கெட்), தமிழ் குமரன் (7 விக்கெட்) ஓரளவு கைகொடுக்கிறார்கள். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நெருக்கடியின்றி ஆடுவார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 5-ல் தூத்துக்குடியும், ஒன்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7.15 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சாய் கிஷோர் தலைமையிலான திருச்சி அணி ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும்.

ஆனால் பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதில் ஜெயித்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தோற்றால் வெளியேற வேண்டியது தான். அவ்வாறு நடந்தால் கோவை கிங்சுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.