2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்


2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்
x
தினத்தந்தி 11 Aug 2019 12:36 AM GMT (Updated: 11 Aug 2019 12:36 AM GMT)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் தொடரை வெற்றிகரமாக தொடங்கியது போல் ஒருநாள் போட்டித் தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். 20 ஓவர் தொடரில் சோபிக்காத தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். 4-வது பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் அந்த வரிசையில் சிறப்பாக செயல்பட்டு தனது இடத்தை தக்கவைப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 2006-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது. அந்த சாதனையை தக்க வைத்து கொள்ள இந்திய அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் 20 ஓவர் போட்டி தொடரில் சந்தித்த மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேடிக்கொள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி போராடும்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இதுவரை 128 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 60 ஆட்டத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி 62 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டையில் முடிந்தது. 4 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

இன்றைய ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் மூத்த வீரர் கிறிஸ் கெய்லின் 300-வது ஆட்டமாகும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடியவரான பிரையன் லாராவை (299 ஆட்டம்) அவர் முந்துகிறார்.

இதே போல் இந்திய கேப்டன் விராட் கோலியும் சாதனையின் விளிம்பில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர் இதுவரை 1,912 ரன்கள் (34 ஆட்டம்) சேர்த்துள்ளார். இன்னும் 19 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வரான பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட்டின் (1930 ரன்) சாதனையை முறியடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.

வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், பிராத்வெய்ட், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல்.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென் 1, சோனி டென் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று ஓரளவு மேகமூட்டம் காணப்படும் என்றும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story