இந்திய அணி வீரர் விராட் கோலி 75-80 சதங்கள் குவிப்பார் - வாசிம் ஜாபர் கணிப்பு


இந்திய அணி வீரர் விராட் கோலி 75-80 சதங்கள் குவிப்பார் - வாசிம் ஜாபர் கணிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 2:36 PM GMT (Updated: 12 Aug 2019 2:36 PM GMT)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 75-80 சதங்கள் குவிப்பார் என இந்திய அணியின் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில், கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான   2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த  இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. இதில் சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர்  விராட் கோலி 120(125) ரன்களில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் 79 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து,280 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், மழை காரணமாக போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ரன்களாக மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின்  பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 75-80 சதங்களை குவிப்பார் என்று கணித்துள்ளார்.

இது தொடர்பாக வாசிம் ஜாபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 

11 இன்னிங்சுக்கு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயல்பான ஆட்டம் தொடங்கியுள்ளது என்றும். மேலும் என்னுடைய (வாசிம் ஜாபர்) கணிப்பு படி விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில்  75-80 ஒருநாள் சதங்கள் குவிப்பார் என கூறியுள்ளார்.

இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகள் ஆடிய வாசிம் ஜாபர், இரண்டு இரட்டை சதங்கள், ஐந்து சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் குவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலி, 238 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11,406 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 8-வது இடத்தில் உள்ளார். 

Next Story