டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது?


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது?
x
தினத்தந்தி 12 Aug 2019 11:30 PM GMT (Updated: 12 Aug 2019 11:21 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நத்தம்,

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிளைமாக்சை நெருங்கி விட்டது. திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.

ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இந்த சீசனிலும் அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டது. லீக் சுற்றில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, கோவை கிங்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதல் தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தோல்வி கண்டது.

திண்டுக்கல் அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் என். ஜெகதீசன் (398 ரன் கள்), ஹரி நிஷாந்த் (267 ரன்கள்) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் சிலம்பரசன் (11 விக்கெட்), ஆர்.அஸ்வின் (136 ரன்கள், 8 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணி யின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

ஷிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி லீக் ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (திண்டுக்கல், காஞ்சி வீரன்ஸ் அணிகளிடம்) புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது. முதல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

மதுரை அணியில் அருண் கார்த்திக் (345 ரன்கள்) பேட்டிங்கில் கலக்கி வருகிறார். பந்து வீச்சில் கிரண் ஆகாஷ் (15 விக்கெட்), ரஹில் ஷா (12 விக்கெட்) ஆகியோர் அசத்துகிறார்கள். அருண் கார்த்திக்குக்கு பக்கபலமாக மற்ற பேட்ஸ்மேன்கள் செயல்பட்டால் மதுரை அணி லீக் ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் எனலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்திக்கும். இறுதிப்போட்டி வாய்ப்புக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை மோதி இருக்கின்றன. இதில் திண்டுக்கல் அணி 5 முறையும், மதுரை அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் திண்டுக்கல் அணி நத்தம் மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story