இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு


இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:38 PM GMT (Updated: 13 Aug 2019 11:38 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்ஆப்பிரிக்க அணியில் 3 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது. டெஸ்ட் தொடர் அக்டோபர் 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் தொடருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜே, சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் செனுரன் முத்துசாமி, விக்கெட் கீப்பர் ருடி செகண்ட் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளனர். இதன் துணை கேப்டன் பதவி பவுமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அணியில் பிளிஸ்சிஸ்சுக்கு இடமில்லை. அடுத்த உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில் 35 வயதான பிளிஸ்சிஸ் குறுகிய வடிவிலான போட்டியில் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணி:- பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), பவுமா, டி புருன், குயின்டான் டி காக், டீன் எல்கர், ஜூபைர் ஹம்சா, கேஷவ் மகராஜ், மார்க்ராம், செனுரன் முத்துசாமி, நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் பிலாண்டர், டேன் பிய்ட், காஜிசோ ரபடா, ருடி செகண்ட்.

தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணி: குயின்டான் டி காக் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், பவுமா, ஜூனியர் தலா, ஜோர்ன் போர்ச்சுன், பீரன் ஹென்ரிக்ஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ஜே, பெலக்வாயோ, வெய்ன் பிரிட்டோரியஸ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி, ஜோன்-ஜோன் ஸ்மட்ஸ்.


Next Story