ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:44 PM GMT (Updated: 13 Aug 2019 11:44 PM GMT)

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் 2-வது இன்னிங்சில் சொதப்பியதால் சொந்த மண்ணில் மோசமான தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியில் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், காயம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலாகவும், சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச், மொயீன் அலிக்கு மாற்றாகவும் ஆடும் லெவனில் இடம் பெறுகிறார்கள். டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆஸ்திரேலிய அணியினருக்கு அச்சுறுத்தலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பேட்டின்சனுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் அல்லது ஹேசில்வுட் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும்.

ஆஸ்திரேலிய அணி தனது வெற்றிப் பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் வரிந்து கட்டும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். இரு அணிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.

ஆஸ்திரேலியா: பான் கிராப்ட், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன், ஹேசில்வுட் அல்லது மிட்செல் ஸ்டார்க்.


Next Story