வெஸ்ட் இண்டீசில் சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் மேலாளர்


வெஸ்ட் இண்டீசில் சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் மேலாளர்
x
தினத்தந்தி 15 Aug 2019 12:23 AM GMT (Updated: 15 Aug 2019 12:23 AM GMT)

வெஸ்ட் இண்டீசில் சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் மேலாளர், மன்னிப்பு கேட்டதால் திரும்ப அழைக்கும் முடிவை கிரிக்கெட் வாரியம் கைவிட்டது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பர படம் ஒன்றை எடுத்து அனுப்பும்படி மத்திய அரசு கிரிக்கெட் வாரியத்தை அறிவுறுத்தியிருந்தது. இதையொட்டி கரீபியனில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவர், இந்திய அணிக்கான நிர்வாக அலுவலர் சுனில் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு இந்த விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்ட போது, என்னை அடிக்கடி தொந்தரவு செய்யாதீர் என்று பதில் அளித்துள்ளார். இதே போல் தூதரக அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் முன்னணி நிர்வாகி ஆகியோரின் போன் அழைப்புகளை தொடர்ச்சியாக நிராகரித்து அவமதித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

சுனில் சுப்பிரமணியத்தின் ஒழுங்கீன செயல் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் பறந்தது. இதனால் அதிருப்தி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை தாயகம் திரும்பும்படியும், கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் நேற்று மாலை உத்தரவிட்டது. ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போதும் அவர் மீது இது போன்ற புகார் வந்தது.

இந்த நிலையில் தனது செயலுக்கு இந்திய தூதரக அதிகாரிகளிடம் சுனில் சுப்பிரமணியம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் வாரியம் அவரை திரும்ப அழைக்கும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

கிரிக்கெட் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் கூறுகையில், ‘விளம்பர பட வேண்டுகோள் இந்திய அரசாங்கத்திடம் இருந்து வந்தது என்பது குறித்து சுனில் சுப்பிரமணியத்துக்கு தெரியாது. அவரை திரும்ப அழைக்கலாம் என்ற நினைத்தவேளையில் அவர் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். இதை ஏற்று அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் நீடிக்க செய்ய முடிவு செய்திருக்கிறோம்’ என்றார்.

முன்னாள் தமிழக சுழற்பந்து வீச்சாளரான 52 வயதான சுனில் சுப்பிரமணியம் முதல்தர கிரிக்கெட்டில் 74 ஆட்டங்களில் ஆடி 285 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.


Next Story