கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்? + "||" + TNPL. Who is going to be crowned cricketer?

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் சூடப்போவது யார்?
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை,

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.


முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை சாய்த்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை விரட்டியடித்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

2017-ம் ஆண்டு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கோபிநாத் (293 ரன்கள்), கங்கா ஸ்ரீதர் ராஜூ (225 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் பெரியசாமி (16 விக்கெட்), ஹரிஷ்குமார் (15 விக்கெட்), அலெக்சாண்டர் (11 விக்கெட்), முருகன் அஸ்வின் (8 விக்கெட்) உள்ளிட்டோர் கலக்குகிறார்கள். குறிப்பாக மலிங்கா பாணியில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி இந்த சீசனில் 20-க்கும் மேற்பட்ட யார்க்கர் வீசி எதிரணியினரை கலங்கடித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத நட்சத்திர வீரர்களான கேப்டன் கவுசிக் காந்தி, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங்கில் முழுமையான பங்களிப்பை அளித்தால் சேப்பாக் சூப்பர் கில்லீசின் வீறுநடையை தடுப்பது கடினம்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது ஜாலியாக கால்பந்து ஆடிய காட்சி


கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்று விட்டதால் இந்த போட்டியில் ஆடவில்லை. இருப்பினும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசன் (448 ரன்கள்), ஹரி நிஷாந்த் (318 ரன்கள்) ஆகியோர் இந்த சீசனில் 3 முறை 100 ரன்களுக்கு மேல் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு சேர்த்து இருக்கின்றனர். ஒரு சதம் மற்றும் 4 அரைசதம் அடித்துள்ள ஜெகதீசன் மேலும் 25 ரன்கள் சேர்த்தால் டி.என்.பி.எல். போட்டி தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த வகையில் மதுரை பாந்தர்ஸ் வீரர் அருண்கார்த்திக் கடந்த ஆண்டில் 472 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. பந்து வீச்சில் சிலம்பரசன் (14 விக்கெட்), ரோகித் (10 விக்கெட்), கவுசிக் (8 விக்கெட்), அபினவ் (7 விக்கெட்) ஆகியோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கில்லீஸ் அணி 3 முறையும், திண்டுக்கல் அணி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத், கவுசிக் காந்தி (கேப்டன்), விஜய் சங்கர், சசிதேவ், ஹரிஷ்குமார், முருகன் அஸ்வின், சுஷில், சித்தார்த், பெரியசாமி, அலெக்சாண்டர்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த், ஜெகதீசன் (கேப்டன்), விவேக், சதுர்வேத், முகமது, சுமந்த் ஜெயின், ஆதித்யா அருண், யாழ் அருண்மொழி அல்லது ஜெ.கவுசிக், ரோகித், சிலம்பரசன், அபினவ்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் போர்ட்ஸ் தமிழ், விஜய் சூப்பர் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த ராசி தொடருமா?

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 2016-ம் ஆண்டில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. இதேபோல் 2017-ம் ஆண்டில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், 2018-ம் ஆண்டு திண்டுக்கல் டிராகன்சும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த போதிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்டன. இந்த சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. முதலிட துரதிர்ஷ்டம் இந்த முறையும் தொடருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

கேப்டன்கள் சொல்வது என்ன?

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன. ஆனால் நாளை (இன்று) புதிய நாள், புதிய போட்டியாகும். தகுதி சுற்றில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது நம்பிக்கை அளித்தாலும், இறுதிப்போட்டியில் அந்த ஆட்டத்தின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்காது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி தனது திட்டங்களை களத்தில் கச்சிதமாக செயல்படுத்துகிறதோ? அந்த அணிக்கு தான் வெற்றி கிட்டும். விஜய் சங்கரின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகும். அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவரது அனுபவம் வீரர்கள் ஓய்வறையில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வருகிறது. அவர் ஒரு முப்பரிமாண வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும்’ என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஜெகதீசன் கூறுகையில், ‘அஸ்வின் போன்ற ஒரு வீரர் தொடரில் கடைசி வரை ஆடியது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருந்தது. இறுதிப்போட்டியில் அவர் ஆட முடியாமல் போனது எங்களுக்கு நிச்சயம் பெரிய இழப்பாகும். ஆனால் அவர் இல்லாவிட்டாலும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்-பெரியசாமி அசத்தல் பந்து வீச்சு
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 2-வது முறையாக சொந்தமாக்கியது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட் ‘பிளே-ஆப்’ சுற்று: திண்டுக்கல் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயம் செய்துள்ளது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
4. டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.