நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:16 PM GMT (Updated: 15 Aug 2019 11:16 PM GMT)

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது.

காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. மழை பாதிப்பினால் முதல் நாளில் 32 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ராஸ் டெய்லர் (86 ரன்) முந்தைய நாள் ஸ்கோரிலேயே ஆட்டம் இழந்தார். டிரென்ட் பவுல்ட் 18 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் மிடில் வரிசை வீரர்கள் குசல் மென்டிஸ் (53 ரன்), மேத்யூஸ் (50 ரன்) அரைசதம் கடந்து வெளியேறியதும், தடுமாற்றதிற்கு உள்ளானது. ஒரு கட்டத்தில் 161 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (39 ரன்), லக்மல் (24 ரன்) ஆகியோர் மேற்கொண்டு 24 ஓவர்கள் சமாளித்து மோசமான நிலையில் இருந்து அணியை மீட்டனர். ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டெனியா வீசிய ஒரு பந்தை நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் முட்டிப்போட்டு விரட்ட முயற்சித்தார். ஆனால் பந்து நேராக அவரது ஹெல்மெட்டை தாக்கியதோடு, தடுப்பு கம்பிக்குள் புகுந்தது. சில வினாடிகள் பந்து எங்கு சென்றது என்பது கூட அவருக்கு தெரியவில்லை. ஹெல்மெட் தடுப்பு கம்பியில் பந்து சிக்கியதை இலங்கை வீரர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். பிறகு அதை வெளியே எடுத்ததுடன், அவருக்கு அடிப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் இல்லை. இந்த காட்சி, சமுக வலைதளங்களில் அதிகமாக பரவுகிறது.

Next Story