ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கிறிஸ் கெய்ல் மறுப்பு


ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கிறிஸ் கெய்ல் மறுப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 11:27 PM GMT (Updated: 15 Aug 2019 11:27 PM GMT)

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியான தகவலை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மறுத்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ‘அதிரடி புயல்’ கிறிஸ் கெய்ல் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்கள் நொறுக்கினார். அவர் ஆட்டம் இழந்ததும் இந்திய வீரர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்திய தொடரே தனது கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டியாக இருக்கும் என்று கெய்ல் கூறியிருந்தார். இதனால் இந்த ஆட்டத்துடன் கெய்ல் விடைபெறுவதாக தகவல்கள் கசிந்தன. ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி மரியாதை அளித்தனர்.

ஆனால் போட்டி முடிந்ததும் 39 வயதான கெய்ல் இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை என்று தெளிவுப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ பதிவில் பேசிய அவர், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எதுவும் நான் அறிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடருவேன்’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே கிறிஸ் கெய்லுக்கு புகழாரம் சூட்டியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, ‘சிறப்பான கிரிக்கெட் வாழக்கையை பெற்ற கெய்லுக்கு வாழ்த்துகள். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் தனி அடையாளமாக திகழ்கிறார். அது மட்டுமின்றி அவர் பழகுவதற்கு இனிமையான மனிதர். என்னை பொறுத்தவரை அவரது உயரிய தனித்துவமாக இதைத் தான் குறிப்பிடுவேன். அவரது கிரிக்கெட் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் இரக்க குணம் கொண்ட ஒரு வீரர். இளைஞர்களுக்கு உதவுவார். கிரிக்கெட்டை அனுபவித்து ஜாலியாக ஆடுவார்.

நெருக்கடியான கட்டத்திலும் கூட எப்போதும் சிரித்துக் கொண்டு இருப்பார். ஒரு நண்பராக அவருடன் நிறைய நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மனிதரில் அவர் ஒரு மாணிக்கம். அவரை நினைத்து உண்மையிலேயே பெருமை அடைகிறேன்’ என்றார்.

Next Story