கிரிக்கெட்

“கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்” - 5 விக்கெட் வீழ்த்திய பெரியசாமி பேட்டி + "||" + "We won by joint effort" - Periyasamy interview for 5 wickets

“கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்” - 5 விக்கெட் வீழ்த்திய பெரியசாமி பேட்டி

“கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம்” - 5 விக்கெட் வீழ்த்திய பெரியசாமி பேட்டி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களின் கூட்டு முயற்சியால் கோப்பையை வென்றோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி கூறியுள்ளார்.
சென்னை,

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 2-வது முறையாக மகுடம் சூடியது. இதில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சசிதேவ் 44 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களுக்கு அடங்கி தோல்வியை தழுவியது.


சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் ஒரு பவுலர் 5 விக்கெட் சாய்ப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹீரோவாக முத்திரை பதித்த பெரியசாமி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார். யார்க்கர் மன்னனாக வலம் வந்த 25 வயதான பெரியசாமி கூறியதாவது:-

இந்த வெற்றியால் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியில் திளைக்கிறேன். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இறுதி ஆட்டத்தில் குறைந்த ஸ்கோர் எடுத்த போதிலும், ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டால் எதிரணியை மடக்கி விடலாம் என்று நம்பிக்கையோடு செயல்பட்டோம். விவேக்கின் (2 சிக்சருடன் 23 ரன்) விக்கெட் தான் திருப்பு முனையாக அமைந்தது. அணியில் அனைவரும் தங்களது சிறப்பாக பங்களிப்பை அளித்தனர். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

மலிங்கா பாணியில் பந்து வீசுவது குறித்து கேட்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த மாதிரி தான் பந்து வீசி வருகிறேன். திடீரென மாற்றிக்கொண்ட ஸ்டைல் இது அல்ல. மலிங்காவின் பந்து வீச்சை டி.வி.யில் பார்ப்பேன். அதற்காக அவரது பந்து வீச்சை அப்படியே எனக்குள் உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதில்லை.

தொடர்ந்து பந்து வீச்சை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். அடுத்து வழக்கமான டிவிசன் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன். தமிழக அணியிலும், ஐ.பி.எல். கிரிக்கெட் அணியிலும் வாய்ப்பு கிடைப்பது குறித்து நான் எதிர்பார்க்கவில்லை. கிடைத்தால் மகிழ்ச்சி தான். கிரிக்கெட் வீரர்களில் சச்சின் தெண்டுல்கர், தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவ்வாறு பெரியசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பெரியசாமி சிறு வயதில் அம்மை நோய் பாதிப்பால் வலது கண் பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.