ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...


ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...
x
தினத்தந்தி 17 Aug 2019 7:06 AM GMT (Updated: 17 Aug 2019 7:06 AM GMT)

டி.என்.பி.எல். போட்டியில் மலிங்கா போல் பந்துவீசும் பெரியசாமி திறமையை வெளிப்படுத்துவார் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கணித்தது பலித்து உள்ளது.

சென்னை

2019-ம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து  முடிந்திருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள்  வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 2-வது முறையாக மகுடம் சூடியது. இதில் முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8  விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சசிதேவ் 44 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களுக்கு அடங்கி தோல்வியை தழுவியது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5  விக்கெட்டுகளை அள்ளினார். டி.என்.பி.எல். இறுதி ஆட்டத்தில் ஒரு பவுலர் 5 விக்கெட் சாய்ப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹீரோவாக முத்திரை பதித்த பெரியசாமி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார். இந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு இளம் வீரர் தான் பெரியசாமி.

யார் இந்த பெரியசாமி... ஒட்டு மொத்த தமிழக ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் அவர் திருப்பியது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை... சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் பெரியசாமி. கணேசன் - காந்தாமணி தம்பதியினரின் 3-வது மகன். லாரி ஓட்டுனரான  கணேசன் உடல்நிலை காரணமாக, தற்போது வீட்டிலேயே டீ கடை நடத்தி  வருகிறார். பெரியசாமியின் தாய் ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார். சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வமில்லாத பெரியசாமி ஆடு மேய்ப்பது முதல் நெசவு, நூல் மில் வரை பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள பெரியசாமிக்கு ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் பந்து வீச்சு பயிற்சி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை பெற்ற பெரியசாமிக்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விளையாட தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பெரியசாமி தனது திறமையை தமிழகம் அறிய செய்துள்ளார்.

பெரியசாமியின் கிராமத்தில் குடும்பத்தினரும், கிராம இளைஞர்களும்  பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஆடு மேய்த்த பெரியசாமி கிரிக்கெட் ஆடுகளத்தில் அனைவரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சாதனைக்கு படிப்பு முக்கியம் இல்லை,  லட்சியமும் அதை வென்றெடுக்கும் ஆர்வமும் இருந்தால் போதும் சாதனை படைக்கலாம் என்ற வார்த்தைகளை மெய்யாக்கி இருக்கிறார்.

ஜூலை 13-ந்தேதி டி.என்.பிஎல் .கிரிக்கெட் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன்  நிருபர்களிடம் கூறுகையில்,

டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு  போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு தேர்வாகியுள்ள ஜெபசெல்வின், ஆனந்த், சந்தானசேகர் ஆகியோர் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் தான். எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. கிரிக்கெட் நன்றாக ஆடினால் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

அது போலவே பெரியசாமி  டிஎன்பிஎல் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கணித்தது பலித்து உள்ளது.

Next Story