கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி + "||" + 268 runs target against New Zealand: Sri Lanka team to victory

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி
காலே டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
காலே,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் வாட்லிங் (63 ரன்), வில்லியம் சோமர்வில்லி (5 ரன்) களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் 4-வது நாளான நேற்று நியூசிலாந்தின் கடைசி கட்ட வீரர்கள் கடுமையாக போராடினர். வாட்லிங் 77 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிரென்ட் பவுல்ட் 26 ரன்களும், அஜாஸ் பட்டேல் 14 ரன்களும் தங்கள் பங்குக்கு திரட்டினர். 9-வது வரிசையில் ஆடிய சோமர்வில்லி 40 ரன்களுடன் (118 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை மண்ணில், 2-வது இன்னிங்சில் 9 மற்றும் அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் அதிகமான பந்துகளை (118 பந்து) சந்தித்த 2-வது வீரர் என்ற சிறப்பை சோமர்வில்லி பெற்றார்.

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 106 ஓவர்களில் 285 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்டெனியா 4 விக்கெட்டுகளும், தனஞ்ஜெயா டி சில்வா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 268 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 100 ரன்களுக்கு மேலான இலக்கை எந்த அணியும் விரட்டிப்பிடித்ததில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடின இலக்கை நோக்கி இலங்கை அணியின் 2-வது இன்னிங்சை கேப்டன் கருணாரத்னேவும், திரிமன்னேவும் தொடங்கினர். இருவரும் அவசரம் காட்டாமல் மிகவும் நிதானமாக ஆடினர். 22-வது ஓவரில் தான் முதல் பவுண்டரியே வந்தது. நியூசிலாந்தின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் இவர்கள் திறம்பட சமாளித்து அமர்க்களப்படுத்தினர்.

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்துள்ளது. 4-வது இன்னிங்சில் இலங்கை ஜோடி ஒரு விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்சம் (133 ரன்) இது தான். மூன்று முறை கண்டத்தில் இருந்து தப்பித்த கருணாரத்னே 71 ரன்களுடனும் (168 பந்து, 2 பவுண்டரி), திரிமன்னே 57 ரன்களுடனும் (132 பந்து, 4 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 10 விக்கெட் இருப்பதால் அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஆனாலும் கடைசி நாளில் சுழல் ஜாலம் அதிகமாக எடுபட்டால் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். அதற்கு முதலில் வருணபகவான் வழிவிட வேண்டும். பிற்பகலுக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.