இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’


இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’
x
தினத்தந்தி 17 Aug 2019 11:30 PM GMT (Updated: 17 Aug 2019 11:30 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித்தை ‘பவுன்சர்’ பந்து தாக்கி கீழே சரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

லண்டன்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 258 ரன்னில் அடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 80 ரன்களுடன் பரிதவித்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (13 ரன்), மேத்யூ வேட் (0) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். மேத்யூ வேட் (6 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன், சுமித்துக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். இங்கிலாந்து பவுலர்கள் குறிப்பாக அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகமாக பந்து வீசி சரமாரி தாக்குதல் தொடுத்தார். அவர் வீசிய பந்து சுமித்தின் முழங்கையை பதம் பார்த்தது. பிறகு அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். அணியின் ஸ்கோர் 162 ரன்களை எட்டிய போது, டிம் பெய்ன் 23 ரன்களில் (70 பந்து) கேட்ச் ஆனார்.

மறுமுனையில் நேர்த்தியாக ஆடிய சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் இடைவிடாது குடைச்சல் கொடுத்தார். அவர் மணிக்கு 92.4 மைல் வேகத்தில் வீசிய ஒரு பவுன்சர் பந்து சுமித்தை பயங்கரமாக தாக்கியது. அதாவது அந்த பந்தை தவிர்ப்பதற்காக சுமித் தலையை உள்பக்கமாக இழுப்பதற்குள் இடது காதுக்கு கீழே கழுத்தில் பந்து தாக்கி விட்டது. இதில் நிலைகுலைந்து போன ஸ்டீவன் சுமித் மைதானத்தில் சரிந்தார். இப்படிப்பட்ட சீற்றத்துடன் வந்த ஒரு பந்து தான் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உயிரை குடித்தது. அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பவுன்சர் தாக்குதல் அமைந்ததால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் உடனடியாக களத்திற்கு வந்து சிகிச்சை அளித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஆபத்தும் ஏதும் இல்லை. ஆனாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறினார். அப்போது அவர் 80 ரன்களுடன் இருந்தார்.

அடுத்து வந்த பீட்டர் சிடில் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் அடிவாங்கி வெளியேறிய சுமித் தைரியமாக மீண்டும் களம் புகுந்து ஆச்சரியப்படுத்தினார். தனது 26-வது சதத்தை 8 ரன்னில் நழுவ விட்ட சுமித் 92 ரன்களில் (161 பந்து, 14 பவுண்டரி) கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. தொடர்ந்து நாதன் லயன் 6 ரன்னிலும், கம்மின்ஸ் 20 ரன்னிலும் (80 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர்.

முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 8 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவர் முடிந்திருந்த போது 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜாசன் ராய் (2 ரன்), கேப்டன் ஜோ ரூட் (0) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்த டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

இந்த டெஸ்டில் மழை காரணமாக ஒன்றரை நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story