சமூக வலைத்தளங்களில் அதிக நபர்கள் பின் தொடரும் பட்டியல் - கேப்டன் விராட் கோலி முதலிடம்


சமூக வலைத்தளங்களில் அதிக நபர்கள் பின் தொடரும் பட்டியல் - கேப்டன் விராட் கோலி முதலிடம்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:42 PM GMT (Updated: 18 Aug 2019 4:42 PM GMT)

உலக அளவில் சமூக வலைத்தளங்களில், அதிகம் நபர்கள் பின் தொடரப்படும் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் நபர்கள் பின் தொடரப்படும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் குவித்து, கிரிக்கெட் உலகில் பல எண்ணற்ற சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றிலும் தலா 3 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். 

விராட் கோலிக்கு அடுத்தபடியாக, 2-வது இடத்தில், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து, பலரால் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் இருக்கிறார். அவரை பேஸ்புக்கில் 2.8 கோடி பேரும், டுவிட்டரில் 3 கோடியே 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 65 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

சச்சினுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில், சில ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை கனவினை நனவாக்கிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன், தோனி இடம்பிடித்துள்ளார். அவரை பேஸ்புக்கில் 2 கோடியே 5 லட்சம் பேரும், டுவிட்டரில் 77 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 54 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள். தோனிக்கு அடுத்தப்படியாக 4-வது இடத்தில், ஓரு நாள் போட்டியில் 3 இரட்டை சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா உள்ளார்.

இவர்களை தொடர்ந்து, 5,6,7-வது ஆகிய இடங்களில் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். 8-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ், 9-வது இடத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான், 10-வது இடத்தில மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Next Story