பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்


பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:41 PM GMT (Updated: 18 Aug 2019 11:41 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்.

ஆன்டிகுவா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மயங்க் அகர்வால் (12 ரன்), லோகேஷ் ராகுல் (36 ரன்), பொறுப்பு கேப்டன் ரஹானே (1 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினர்.

இதன் பின்னர் புஜாராவும், ரோகித் சர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரோகித் சர்மா 68 ரன்களில் கேட்ச் ஆனார். நிலைத்து நின்று ஆடிய புஜாரா சதம் (100 ரன், 187 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்து அசத்தினார். கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய புஜாராவுக்கு இந்த ஆட்டம் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். சதம் அடித்த கையோடு பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புஜாரா ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரிஷாப் பண்ட் 33 ரன்களில் (53 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சிஸ் 88.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் சேர்த்தது. ஹனுமா விஹாரி 37 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணி அதே ஸ்கோரில் (297 ரன்) ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 40 ஓவர் முடிந்திருந்த போது 6 விக்கெட்டுக்கு 120 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது. இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


Next Story