கிரிக்கெட்

பவுன்சர் பந்து தாக்கிய விவகாரம்: சோயிப் அக்தரை கலாய்த்த யுவராஜ் சிங் + "||" + Bouncer Ball Struck Affair Shoaib Akhtar Tease Yuvraj Singh

பவுன்சர் பந்து தாக்கிய விவகாரம்: சோயிப் அக்தரை கலாய்த்த யுவராஜ் சிங்

பவுன்சர் பந்து தாக்கிய விவகாரம்: சோயிப் அக்தரை கலாய்த்த யுவராஜ் சிங்
ஸ்டீவ் ஸ்மித் மீது பவுன்சர் பந்து தாக்கியது தொடர்பான சோயிப் அக்தர் டுவிட்டருக்கு, யுவராஜ் சிங் பதில் டுவிட் செய்துள்ளார்.
லண்டனில் நடந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆஷஸ் 2-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய  முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு பந்து எகிறிச் சென்று அவரது கழுத்தை பயங்கரமாக பதம் பார்த்ததில் சுமித் நிலைகுலைந்து கீழே சரிந்தார். மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு தைரியமாக மீண்டும் களம் இறங்கி 92 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து கழுத்து பகுதியில் மேற்கொண்டு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை துல்லியமாக அறிய ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்னஸ் லபுஸ்சேன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட் விளையாட்டில் “பவுன்சர்கள் என்பது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால் பவுன்சர் பந்து பேட்ஸ்மேன்னை தாக்கிவிட்டால் பந்துவீச்சாளர் அவரை பார்த்து நலம் விசாரிக்க வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் விவகாரத்தில் ஆர்ச்சர் எதுவும்  செய்யாதது போல் நடந்து சென்றது சரியில்லை. ஸ்மித் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அவரை ஆர்ச்சர் சென்று பார்த்திருக்க வேண்டும்.  நான் பந்துவீசிய போது, பேட்ஸ்மேன் மீது பந்து பட்டுவிட்டால் அவரை  நோக்கி ஓடும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்” என்று  பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அணியின்  முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஆமாம் நீங்கள் முதலில் உடனே ஓடி வந்து நலம் விசாரிப்பீர்கள். நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பீர்கள். ஏனென்றால் இன்னும் நிறைய பவுன்சர் வரும் என்பதுதான் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.