டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேற்றம்


டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேற்றம்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:52 PM GMT (Updated: 19 Aug 2019 11:52 PM GMT)

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முன்னேறினார்.

துபாய்,

ஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (922 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவன் சுமித் (913 புள்ளிகள்) 10 புள்ளிகள் அதிகரித்து 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறினார். விராட்கோலியை விட ஸ்டீவன் சுமித் 9 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளார். 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (887 புள்ளிகள்) 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய வீரர் புஜாரா (881 புள்ளிகள்) 4-வது இடத்தில் தொடருகிறார். முதல் 10 இடங்களுக்குள் மற்ற எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை.

நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் 5-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர்கள் மார்க்ராம் 6-வது இடத்திலும், குயின்டான் டி காக் 7-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே 4 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் 9-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் டுபிளிஸ்சிஸ் 10-வது இடத்திலும் இருக்கின்றனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (914 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வீரர் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 4-வது இடத்திலும் தொடருகின்றனர். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் நீல் வாக்னெர் 6-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் 7-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ், வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் ஆகியோர் இணைந்து 8-வது இடத்திலும், இந்திய வீரர் ஆர்.அஸ்வின் 10-வது இடத்திலும் இருக்கின்றனர்.


Next Story