டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் அதிக வெற்றி: டோனியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி


டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் அதிக வெற்றி: டோனியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 8:52 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஆன்டிகுவா, 

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

விராட் கோலி புதிய சாதனை ஒன்றை நெருங்கியுள்ளார். இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், டெஸ்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்குரிய டோனியின் சாதனையை கோலி சமன் செய்து விடுவார். 2-வது டெஸ்டிலும் வாகை சூடினால் டோனியின் சாதனை தகர்ந்து விடும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட டோனியின் தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டுகளில் விளையாடி அதில் 27-ல் வெற்றியும், 18-ல் தோல்வியும், 15-ல் டிராவும் கண்டுள்ளது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 46 டெஸ்டுகளில் பங்கேற்று அதில் 26 வெற்றிகளை குவித்து இருக்கிறது. மேலும் 10-ல் தோல்வியையும், 10-ல் டிராவும் சந்தித்துள்ளது. இந்த சாதனை பட்டியலில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (49 டெஸ்டில் 21-ல் வெற்றி) 3-வது இடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுகளில் வெற்றி பெற்றதில்லை. இந்த காலக்கட்டத்தில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 21 டெஸ்டுகளில் ஆடி அதில் 12-ல் தோல்வியும், 9-ல் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story