கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + India-West Indies clash First Test starts today

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது.
ஆன்டிகுவா, 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்திய அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் கோலோச்சுவதில் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் தான் கேப்டன் கோலிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. அவரது விருப்பப்படி 5 பவுலர்களுடன் களம் இறங்கினால் துணை கேப்டன் ரஹானே அல்லது ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவரை கழற்றிவிட வேண்டி இருக்கும். 4 பவுலர்களுடன் ஆடினால் இவர்கள் இருவரையும் சேர்க்கலாம். இதே போல் காயத்தில் இருந்து குணமடைந்து ஒன்றரை ஆண்டுக்கு பிறகு விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்புக்குரிய ரிஷாப் பண்டும் அணியில் உள்ளார். இவர்களில் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்ற குழப்பமும் நிலவுகிறது.

அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

வெஸ்ட் இண்டீசில் உள்ள ஆடுகளங்கள் முன்பு போல் புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் தயார்படுத்தப்படுகிறது. ஆன்டிகுவா ஆடுகளமும் அந்த வகையைச் சேர்ந்தது தான். கடந்த பிப்ரவரி மாதம் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் ஆடுகளத்தன்மை உயிரோட்டமாக இருந்ததை காண முடிந்தது. அந்த தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சாய்த்தது.

அதனால் இந்த தடவை வெஸ்ட் இண்டீஸ் தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இருக்காது. பயிற்சி ஆட்டத்தில் புஜாராவின் சதமும், ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரின் அரைசதமும் நம்பிக்கை அளிக்கின்றன. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மிரட்டுவார்கள். சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு அஸ்வின் சேர்க்கப்படுவாரா? என்பது சந்தேகம் தான். அவர் இல்லாவிட்டால் முழங்கையை பயன்படுத்தி சுழல் ஜாலம் காட்டும் குல்தீப் யாதவ் இடத்தை ஆக்கிரமிப்பார்.

உலக சாம்பியன்ஷிப்

இந்திய கேப்டன் விராட் கோலி சில சாதனைகளை நெருங்குகிறார். இந்த டெஸ்டில் சதம் விளாசினால், ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ரிக்கிபாண்டிங்கின் (கேப்டனாக 19 சதம்) சாதனையை சமன் செய்வார். வெற்றி கண்டால் டெஸ்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டனான டோனியின் சாதனையை சமன் செய்து விடுவார்.

இந்த தொடரில் இருந்து, இந்தியாவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகிறது. இதன் வெற்றி தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாடுவார்கள் என்று நம்பலாம். “சரியான நேரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வந்துள்ளது. இதனால் போட்டிகளில் சவால் இன்னும் அதிகமாக இருக்கும்” என்று கோலி குறிப்பிட்டார்.

லாரா யோசனை

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் திறமையான வீரர்களுக்கு குறைவில்லை. இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து தனக்கு தெரிந்த யுக்திகளை ஜாம்பவான் பிரையன் லாரா வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். ஜாசன் ஹோல்டர், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ‘பவுன்சர்’ மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறார்கள்.

ஏறக்குறைய இங்கிலாந்தை வீழ்த்திய அதே அணி அப்படியே களம் இறங்குகிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்த முடியாமல் தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் அந்த ஏக்கத்தை தணிக்க எல்லா வகையிலும் தீவிரமாக முயற்சிக்கும்.

இரவு 7 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா அல்லது ரஹானே, ரிஷாப் பண்ட் அல்லது விருத்திமான் சஹா, அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கெமார் ரோச், கேப்ரியல், கீமோ பால்.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.