கிரிக்கெட்

ஆஷஸ் 3-வது டெஸ்ட்:இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது + "||" + Ashes 3rd Test: England curled at 67 runs

ஆஷஸ் 3-வது டெஸ்ட்:இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது

ஆஷஸ் 3-வது டெஸ்ட்:இங்கிலாந்து 67 ரன்னில் சுருண்டது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 67 ரன்னில் சுருண்டது.
லீட்ஸ், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 67 ரன்னில் சுருண்டது.

ஆஷஸ் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க நாளில் 179 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. டேவிட் வார்னர் (61 ரன்), லபுஸ்சேன் (74 ரன்) அரைசதம் அடித்தனர். கடைசி 43 ரன்களுக்கு அந்த அணி 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடியது. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலில் ஆஸ்திரேலியாவின் புயல்வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தனர்.

இங்கிலாந்து 67 ரன்

பந்து பெரும்பாலும் பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு பின்பகுதிக்கு கேட்ச்சாக பறந்தது. வெறும் 27.5 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 67 ரன்னில் முடங்கியது. ஜோ டென்லி (12 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கேப்டன் ஜோ ரூட் டக்-அவுட் ஆனார். 1948-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர் இது தான். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர் 112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 55 ஓவர் முடிந்திருந்த போது 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து மொத்தம் 277 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.