கர்நாடகா பிரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள், 134 ரன்கள் எடுத்து சாதனை படைத்த வீரர்


கர்நாடகா பிரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள், 134 ரன்கள் எடுத்து சாதனை படைத்த வீரர்
x
தினத்தந்தி 24 Aug 2019 2:03 PM GMT (Updated: 24 Aug 2019 2:03 PM GMT)

கர்நாடகா பிரீமியர் லீக் போட்டியில் 8 விக்கெட்டுகள் மற்றும் 134 ரன்கள் எடுத்து பெல்லாரி டஸ்கர்ஸ் அணி வீரர் சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரு,

தமிழகத்தில் நடைபெற்ற  டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், இம்முறை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இதை போன்று கர்நாடகாவிலும் கே.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பெல்லாரி டஸ்கர்ஸ் மற்றும் சிவமோகா லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் போட்டி நேற்று (வெள்ளி கிழமை) பெங்களூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெல்லாரி டஸ்கர்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில்  3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கிருஷ்ணப்பா கவுதம் அதிரடியாக விளையாடி சிவமோகா லயன்ஸ் அணியின் பந்துவீச்சை நான்குபுறமும் பறக்கவிட்டார். கிருஷ்ணப்பா கவுதம் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேலும் கிருஷ்ணப்பா கவுதம் 39 பந்துகளில் 100 ரன்களை கடந்து, கே.பி.எல். போட்டிகளில் அதிக வேகமாக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும்  கே.பி.எல். போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் கிருஷ்ணப்பா கவுதம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்குடன் களமிறங்கிய சிவமோகா லயன்ஸ் அணி 16.3 ஓவர்கள் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்களில் சுருண்டது. பெல்லாரி டஸ்கர்ஸ் அணியில் அபாரமாக பந்து வீசிய கிருஷ்ணப்பா கவுதம் 8 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்மூலம்,  சிவமோகா லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட்டுகள் வீழ்த்திய கிருஷ்ணப்பா கவுதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகா ப்ரிமீயர் லிக் தொடரில் அரிய சாதனை படைத்த கிருஷ்ணப்பா கவுதமிற்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Next Story