வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை
x
தினத்தந்தி 25 Aug 2019 12:27 AM GMT (Updated: 25 Aug 2019 12:27 AM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆன்டிகுவா,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானே (81 ரன்), ரவீந்திர ஜடேஜா (58 ரன்) ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தொடுத்த தாக்குதலில் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மிடில் வரிசையில் கொஞ்சம் அதிரடி காட்டிய ரோஸ்டன் சேஸ் 48 ரன்களில் (74 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார்.

ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலையில் காணப்பட்டது. இந்த சூழலில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தனது 2 ஓவர்களில் 3 பேட்ஸ்மேன்களுக்கு அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் ஷாய் ஹோப் (24 ரன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். ஹெட்மயர் (35 ரன், 47 பந்து, 3 பவுண்டரி) பந்து வீசிய இஷாந்திடமே சிக்கினார். கெமார் ரோச் (0) ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் பிடிபட்டார். 5 ரன் இடைவெளியில் மூன்று தலை உருண்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி நெருக்கடியில் சிக்கி தவித்தது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் (10 ரன்), மிக்யூல் கம்மின்ஸ் (0) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீசின் எஞ்சிய 2 விக்கெட்டுகளும் மேற்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்து ஆச்சரியப்படுத்தியது. சக வீரர் கம்மின்சின் துணையுடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்த ஜாசன் ஹோல்டர் 39 ரன்களில் (65 பந்து, 5 பவுண்டரி) முகமது ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் கம்மின்ஸ் (0) ஜடேஜாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார். 45 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத கம்மின்ஸ், அதிக பந்துகளை சந்தித்தும் ரன் கணக்கை தொடங்காமல் அவுட் ஆன மோசமான சாதனை வரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அதில் முதலாவதாக களமிறங்கிய ஜோடியில், மயங்க் அகர்வால் 16 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 38 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய புஜாரா 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ரகானே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் கேப்டன் கோலி, ரகானே ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர். இறுதியில் இந்திய அணி 72 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி 51 ரன்களுடனும், ரகானே 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்களும், கெமார் ரோச் 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


Next Story