ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 25 Aug 2019 3:47 PM GMT (Updated: 25 Aug 2019 11:27 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கதாநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

லீட்ஸ்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி லீட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 179 ரன்களும், இங்கிலாந்து 67 ரன்களும் எடுத்தன. 112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 246 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (75 ரன்) ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 2 ரன் மட்டுமே எடுத்த ஜோ ரூட் (77 ரன்), நாதன் லயனின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் பென் ஸ்டோக்சுடன், ஜானி பேர்ஸ்டோ கைகோர்த்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு பேர்ஸ்டோ 36 ரன்களில் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து ஒரு முனையில் பென் ஸ்டோக்ஸ் நிலை கொண்டு விளையாட இன்னொரு பக்கம் ஜோஸ் பட்லர் (1 ரன்), கிறிஸ் வோக்ஸ் (1 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் (15 ரன்), ஸ்டூவர்ட் பிராட் (0) வரிசையாக நடையை கட்டினர். அப்போது இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 286 ரன்களுடன் தத்தளித்தது. அந்த சமயம் இங்கிலாந்தின் வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த சூழலில் கடைசி விக்கெட்டுக்கு இறங்கிய ஜாக் லீச்சின் துணையுடன் பென் ஸ்டோக்ஸ் விசுவரூபம் எடுத்தார். முடிந்த வரைக்கும் தானே பந்தை அதிகமாக சந்திக்கும் வகையில் திட்டமிட்டு ஆடிய ஸ்டோக்ஸ், லயன் ஓவரில் 2 சிக்சரும், ஹேசில்வுட்டின் ஓவரில் 2 சிக்சரும் பறக்க விட்டு அட்டகாசப்படுத்தினார். அதிரடியில் மிரட்டிய அவர் தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார்.

ஆனாலும் வெற்றி மதில் மீது பூனையாக தெரிந்ததால் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பும், பதற்றமும் நிலவியது. ஜாக் லீச்சும் சந்தித்த சில பந்துகளை சமாளித்துக் கொண்டார். இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. பென் ஸ்டோக்ஸ் 116 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மார்கஸ் ஹாரிஸ் கோட்டை விட்டார். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் வியூகங்களை அடிக்கடி மாற்றி பார்த்தும் பலன் இல்லை. இறுதியில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்குரிய ரன்னை எட்டுவதற்கு பவுண்டரி அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இங்கிலாந்து அணி 125.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 135 ரன்களுடனும் (219 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), ஜாக் லீச் ஒரு ரன்னுடனும் (17 பந்து) களத்தில் இருந்தனர்.

10-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்சும், ஜாக் லீச்சும் 76 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பை பறித்த நடுவர்

இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்த போது, ஜாக் லீச்சுக்கு மிக எளிதான ரன்-அவுட் வாய்ப்பை நாதன் லயன் தவற விட்டார். அத்துடன் அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் முட்டிப்போட்டு பந்தை விளாச முயற்சித்த போது பந்து பேட்டில் படாமல் அவரது காலுறையை தாக்கியது. உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.வி. ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை துல்லியமாக தாக்குவது தெரிந்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா வசம் டி.ஆர்.எஸ். வாய்ப்பு இல்லாததால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியவில்லை. நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கும்.

இங்கிலாந்தின் சிறந்த சேசிங்

டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான். இதற்கு முன்பு 1928-29-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 332 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்ததே இங்கிலாந்தின் அதிகபட்ச சேசிங்காக இருந்தது. டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 4-வது நிகழ்வாகும்.


Next Story