வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றி: கங்குலியின் சாதனையை முறியடித்தார், விராட்கோலி


வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றி: கங்குலியின் சாதனையை முறியடித்தார், விராட்கோலி
x
தினத்தந்தி 27 Aug 2019 12:04 AM GMT (Updated: 27 Aug 2019 12:04 AM GMT)

வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றிகள் பெற்றதன் மூலம், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடித்தார்.


* ஆன்டிகுவாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த இந்திய அணிகேப்டன் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். விராட்கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 26 டெஸ்டில் விளையாடி 12-ல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு கேப்டன் கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 28 டெஸ்டில் விளையாடி 11-ல் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. அத்துடன் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள இந்திய கேப்டன் டோனியின் (60 டெஸ்டில் 27 வெற்றி) சாதனையை விராட்கோலி (47 டெஸ்டில் 27 வெற்றி) சமன் செய்தார்.

* வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் (318 ரன்கள்) இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதே அன்னிய மண்ணில் பெரிய வெற்றியாக இருந்தது.

* சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அதிக ரன் வித்தியாசத்தில் சந்தித்த தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 312 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி சந்தித்த தோல்வியே பெரியதாக இருந்தது.

* வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 100 ரன்னில் சுருண்டது. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அந்த அணியின் குறைந்தபட்ச ரன் இதுவாகும்.

* வெஸ்ட்இண்டீசில் முதல்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான 25 வயது ஜஸ்பிரித் பும்ரா முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாய்ப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட தனது முதல் பயணங்களிலும் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இத்தகைய சாதனையை படைத்த முதல் ஆசிய பவுலர் பும்ரா ஆவார். மேலும் 11-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய பும்ரா இதுவரை 55 விக்கெட்டுகளை அறுவடை செய்து இருக்கிறார். இதன் மூலம் 50 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

* இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பவுலர் பும்ரா 8 ஓவர்கள் பந்து வீசி 7 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இதன் மூலம் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். இதற்கு முன்பு 1990-ம் ஆண்டில் சண்டிகாரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெங்கடபதி ராஜூ 12 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.


Next Story