டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் பும்ரா, ரஹானே முன்னேற்றம்


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் பும்ரா, ரஹானே முன்னேற்றம்
x
தினத்தந்தி 27 Aug 2019 1:50 PM GMT (Updated: 27 Aug 2019 11:02 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் பும்ரா, ரஹானே வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றம் இல்லை. இந்திய கேப்டன் விராட் கோலி (910 புள்ளி) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்திலும் (904 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் (878), இந்தியாவின் புஜாரா 4-வது இடத்திலும் (856), நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ் (749 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகிறார்கள். இலங்கை கேப்டன் கருணாரத்னே 2 இடம் முன்னேறி 6-வது இடத்துக்கும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 81, 102 ரன்கள் வீதம் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய துணை கேப்டன் ரஹானே கிடுகிடுவென 10 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் 135 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணிக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 13 இடங்கள் உயர்ந்து 693 புள்ளிகளுடன் 13-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (851), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (814) நீடிக்கிறார்கள்.

ஆன்டிகுவாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தரவரிசையில் முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். 9 இடங்கள் எகிறிய பும்ரா 774 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறார். மற்றொரு இந்திய பவுலர் இஷாந்த் ஷர்மா 671 புள்ளிகளுடன் 21-வது இடத்தில் உள்ளார். இதே டெஸ்டில் ஜொலிக்க தவறிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சறுக்கியுள்ளார். அவர் 5 இடங்கள் இறங்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஷஸ் 3-வது டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 40 இடங்கள் முன்னேறி 43-வது இடத்தை பெற்றுள்ளார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 4-ல் இருந்து 2-வது இடத்தை (411 புள்ளி) எட்டியுள்ளார். ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டராக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (433 புள்ளி) வலம் வருகிறார்.


Next Story